சிறையில் செந்தில் பாலாஜிக்கு சலுகை தரவில்லை
சென்னை:சென்னை புழல் மத்திய சிறைவாசிகளுக்கு ஆழ்நிலை தியானம், யோகா, இசை, நாடகம், இலக்கியம் மற்றும் விளையாட்டு போன்ற பயிற்சிகள் கற்றுத் தரப்படுகின்றன.இத்திட்டத்தின் கீழ் ஓராண்டு பயிற்சி பெற்ற 40 சிறைவாசிகளுக்கு, நேற்று நடந்த 'சிறைகளில் கலை' நிகழ்ச்சியில் சான்றிதழ் வழங்கப்பட்டது.இதில் பங்கேற்ற சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அளித்த பேட்டி: செந்தில் பாலாஜி சிறையில் இருந்த போது, எந்த விதமான சிறப்பு வசதிகளையும் கோரவில்லை; தனிப்பட்ட உணவையும் கேட்கவில்லை. சிறையில் கொடுக்கப்பட்ட உணவையே சாப்பிட்டார். சாதாரண சிறைவாசி போலவே இருந்தார். சிறையில், மூன்று ஷிப்ட் முறையில், ஒரே நாளில் 728 சிறைவாசிகள் தங்களின் உறவினர்களை சந்திக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஒரே நேரத்தில் 50 வழக்கறிஞர்கள் சிறைவாசிகளை சந்திப்பதற்கும் பிரத்யேக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.