உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருமணம் செய்த சூரியனார் கோவில் ஆதினம்; மடத்தில் இருந்து அப்புறப்படுத்த தீவிரம்

திருமணம் செய்த சூரியனார் கோவில் ஆதினம்; மடத்தில் இருந்து அப்புறப்படுத்த தீவிரம்

மயிலாடுதுறை: சூரியனார் கோவில் ஆதீனம், மகாலிங்க தேசிக பண்டார சுவாமிகள், பெங்களூரைச் சேர்ந்த பெண்ணை திடீரென திருமணம் செய்து கொண்டுள்ளார். இது தொடர்பான பதிவுச் சான்று, சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.தமிழகத்தில் உள்ள 18 சைவ ஆதீனங்களில் குரு முதல்வர் நமச்சிவாய மூர்த்திகளால் திருவாவடுதுறை ஆதீனமும், சிவாக்ர யோகிகளால் சூரியனார் கோவில் ஆதீனமும் 14ம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோற்றுவிக்கப்பட்டவை.இவர்கள் இருவரும் சுத்த அத்வீக சைவம் என்ற கொள்கையில் ஒன்றுபட்டுள்ளனர். பிரம்மச்சாரிகளும், திருமணம் ஆகி பின்னாளில் மனைவி மற்றும் குடும்பத்தை விட்டு விலகி துறவறம் பெற்றவர்களுமே, சூரியனார் கோவில் ஆதினத்தின் குருமகா சன்னிதானங்களாக இருந்துள்ளனர். இந்த ஆதீனத்தின் மரபுப்படி கணவன், மனைவி பந்தம் உடையவர்கள் சன்னிதானமாக இருக்க முடியாது. ஆதீன விதிகளிலும் இடமில்லை. மேலும் இந்த திருமடத்தில் பெண்கள் நிரந்தரமாக தங்கக்கூடாது என்பது, முக்கியமான விதி. இத்தகைய சிறப்பும் கட்டுப்பாடும் மிக்க சூரியனார் கோவில் ஆதீனமாக, துறவறம் பூண்ட சிவாச்சாரியார்களே குருமகா சன்னிதானமாக இருந்துள்ளனர். இதனால், இது சிவாச்சாரியார்கள் மடம் என்றும் அழைக்கப்படுகிறது. காலப்போக்கில் இந்த ஆதீன திருமடத்தை, தனித்து நிர்வகிக்க முடியாத நிலையில் திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்துள்ளனர். திருவாவடுதுறை ஆதீனத்தின் தம்பிரான்களாக இருந்தவர்கள், சூரியனார் கோவில் ஆதினகர்த்தர்களாக நியமிக்கப்பட்டனர்.சூரியனார் கோவில் ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் சங்கரலிங்க தேசிக சுவாமிகள் பரிபூரணம் அடைந்ததை தொடர்ந்து, திருவாவடுதுறை ஆதீனத்தில் தம்பிரானாக இருந்த மகாலிங்க தேசிக பண்டார சுவாமிகள், 28வது குருமகா சன்னிதானமாக நியமிக்கப்பட்டு நிர்வாகம் செய்து வருகிறார். இந்நிலையில், 54 வயதான மகாலிங்க தேசிக பண்டார சுவாமிகள், கடந்த மாதம் கர்நாடக மாநிலம் பெங்களூரு அஞ்சனாபுரம் ராமநகரம் சன்னமனஹள்ளி கும்பார் தெருவை சேர்ந்த சிவராமையா மகள் ஹேமஸ்ரீ, 47, என்பவரை பதிவுத் திருமணம் செய்து கொண்டுள்ளார். மகாலிங்க தேசிக பண்டார சுவாமிகளின் பதிவு திருமணச் சான்று, சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சூரியனார் கோவில் ஆதீனத்திடம், ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் எழுத்துப்பூர்வமான அறிக்கை கேட்டு பெற்றுள்ளனர். திருவாவடுதுறை ஆதின மடத்தின் கீழ் இயங்கும் சூரியனார்கோவில் குருமகா சன்னிதானமாக இருக்கும் மகாலிங்க தேசிய பண்டார சுவாமிகள், விதிகளை மீறி திருமணம் செய்து கொண்டது, திருவாவடுதுறை ஆதின நிர்வாகத்துக்கு கவுரவ குறைச்சலை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், ஹிந்து அறநிலையத் துறை அதிகாரிகள் ஒப்புதலோடு, மகாலிங்க தேசிய பண்டார சுவாமிகளை, குருமகா சன்னிதானப் பொறுப்பில் இருந்து அகற்றி விட்டு, அவருக்கு பதிலாக புதியவர் ஒருவரை நியமிக்க, திருவாவடுதுறை ஆதின மடத்தைச் சேர்ந்தோர் கடும் முயற்சி எடுத்து வருகின்றனர். இதை சட்ட ரீதியில் சந்திக்க, மகாலிங்க தேசிய பண்டார சுவாமிகளும் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.மகாலிங்க தேசிக பண்டார சுவாமிகள், சூரியனார்கோவில் ஆதீனம்

எதையும் சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்

திருமணம் செய்தது உண்மைதான். சிவாச்சாரியார் மடத்தைச் சேர்ந்ததுதான் சூரியனார் கோவில். எங்களது ஆதீனத்தில் திருமணம் செய்து கொண்டவர்கள் பலரும் ஆதீனகர்த்தர்களாக இருந்து, ஏற்கனவே ஆன்மிக சேவையும், பொதுச் சேவையும், கோவில் நிர்வாக சேவையும் செய்துள்ளனர். அந்த வகையில், விதிகளை மீறி, புதிதாக எதையும் நான் செய்யவில்லை. என்ன நடந்துள்ளதோ அதை மறைக்கவும் விரும்பவில்லை. நாலு பேருக்கு தெரிந்து, வெளிப்படையாகத்தான், பதிவு திருமணம் செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு எதிராக இருக்கும் சிலர், இதை வைத்து எனக்கு சட்ட ரீதியில் சிக்கல் எதுவும் ஏற்படுத்தி, என்னை கோவில் நிர்வாகத்தில் இருந்து வெளியேற்றலாமா என முயற்சிக்கின்றனர். அதனாலேயே, கூடாத குற்றத்தை செய்தது போல, செய்தி பரப்புகின்றனர். எதுவும் எடுபடப் போவதில்லை. எதையும், சட்ட ரீதியாக எதிர்கொள்வேன். அதற்கான தகுதியும்; தெம்பும் என்னிடம் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Balakrishnan karuppannan
நவ 09, 2024 07:48

இவர் திராவிட ஆதீனம்...


Sampath Kumar
நவ 08, 2024 12:22

உங்களை போன்றவரால் தான் இந்த சிவமதம் சீர்கெடுகிறது


ko ra
நவ 07, 2024 15:34

இவர் முன்பு தி மு க வை ஆதரித்து பேசியவர். அப்போவே சந்தேகம் வந்தது.


Narayanan
நவ 07, 2024 14:27

இவர் சொல்வதுபோல் முன்னர் இருந்தவர்கள் விவாகம் செய்து , அதனில் இருந்து விலகி சன்யாசம் வாங்கி பின்னர்தான் ஆதீனமாக பரிமளித்திருக்கிறார்கள். ஆதினமான பின் விவாகம் செய்யவில்லை. இவருக்கு திருமண பந்த ஆசை வந்ததால் ஆதீனமாக தொடர தகுதி இல்லை. வேறு ஒருவர்தான் வரவேண்டும் . திராவிடமாடல் ஆட்சி என்பதால் எதையும் செய்யமுடியாது . விலகுங்கள் . வாழுங்கள்


Murali Krishna Nainiyappan
நவ 07, 2024 13:46

தான் மட்டும் மாட்டிக்கொண்டால் எப்படி யாரெல்லாம் இப்படி நடந்தார்கள் என்று கூடாரத்தை காலி செய்ய முடிவு


Rasheel
நவ 07, 2024 12:46

முறை இல்லாத வாழ்க்கையை வாழ்வதை விட இது நல்லது தானே?


P. SRINIVASALU
நவ 07, 2024 11:47

என்ன தவறு.


jayvee
நவ 07, 2024 10:33

ஆதீனம் பதவி விலகுவது நல்லது... தேவையில்லாமல் தமிழக அரசு உள்ளே நுழைந்தால் ஆதீனம் அர்ச் பிஷப் கட்டுப்பாட்டில் சென்றுவிட வாய்ப்புள்ளது


சிவசுப்ரமணியம்
நவ 07, 2024 10:27

சன்யாஸாஸ்ரமத்திலிருந்து மீண்டும் கிரகஸ்தாஸ்ரமத்திற்கு வருவது எப்பேற்பட்டது என்றால் தான் உண்ட உணவினை ....மறுபடியும் உண்பதாகும் என்பது சாஸ்த்ரம்.


Rajarajan
நவ 07, 2024 10:08

தப்பா நினைக்காதீங்க ஸ்வாமி. நல்லா படிச்சா, நல்ல வேலைல இருக்கற இந்த காலத்து, ஒரு குறிப்பிட்ட பிரிவு இளஞ்சர்களுக்கு திருமணத்துக்கு பெண்ணே கிடைக்க மாட்டேங்குது. நீங்க ஏதாச்சும் டிப்ஸ் சொன்னா, அவங்களுக்கு உபயோகமா இருக்கும். பொறாம ? லைட்டா.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை