உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமெட் பல்கலையில் கப்பல் இயக்க மாதிரி மையம் திறப்பு

அமெட் பல்கலையில் கப்பல் இயக்க மாதிரி மையம் திறப்பு

செங்கல்பட்டு: செய்யூர் அருகே, 'அமெட்' பல்கலையில், இந்தியாவின் முதல் அதிநவீன கப்பல் இயக்க மாதிரி மையத்தை, மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த தென்பட்டினம் பகுதியில், 'அமெட்' பல்கலை செயல்படுகிறது. இப்பல்கலையும், ஏ.பி.மோல்லர் - மெர்ஸ்க் நிறுவனமும் இணைந்து, நாட்டின் முதல் அதிநவீன கப்பல் இயக்க மாதிரி மையத்தை பல்கலை வளாகத்தில் அமைத்துஉள்ளன. இதை, மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்தடங்கள் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் நேற்று முன்தினம் திறந்து வைத்தார். பின், மாணவ - மாணவியரிடையே அவர் பேசியதாவது: இங்கு துவங்கப்பட்டுஉள்ள நாட்டின் முதல் அதிநவீன கப்பல் இயக்க மாதிரி மையம், நம் மாணவர்களுக்கும், கடல்சார் வல்லுனர்கள் மற்றும் நிபுணர்களுக்கும், கப்பல் துறையில் சிறந்து விளங்க தேவையான மேம்பட்ட திறன்களை வழங்கும். நவீன கப்பல் போக்குவரத்தின் சவால்களுக்கு நாம் தயாராகவும், திறமையான களப்பணி வல்லுனர்களை உருவாக்குவதற்கும் இம்மையம் உதவியாக இருக்கும். நமக்கான இலக்கு தெளிவாக உள்ளது. வரும், 2030க்குள் கப்பல் போக்குவரத்து, தளவாடங்கள் மற்றும் கடல்சார் திறமைகளில் உலகின் முதல், 10 கடல்சார் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும். அடுத்த கட்டமாக, 2047ம் ஆண்டுக்குள் உலகின் முதல் ஐந்து நாடுகளில் ஒன்றாக இருக்கும். அதற்கான பொறுப்பும், கடமையும் மாணவர்களாகிய உங்களிடம் தான் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இவ்விழாவில், மத்திய கப்பல் போக்குவரத்து துறை இயக்குநர் ஜெனரல் ஷியாம் ஜகநாதன், 'அமெட்' பல்கலையின் நிறுவனர் நாசே ராமச்சந்திரன், 'மெர்ஸ்க்' நிறு வனத்தின் மூத்த இயக்குநர் நைனி நார்மல் ஷூவர், அமெட் பல்கலையின் தலைவர் ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை