உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஷாக்கடிக்குது மின் கட்டண பில்; ஒரு கோடியே 61 லட்சம் ரூபாய்; அளவீடு செய்த போது குளறுபடியால் பகீர்

ஷாக்கடிக்குது மின் கட்டண பில்; ஒரு கோடியே 61 லட்சம் ரூபாய்; அளவீடு செய்த போது குளறுபடியால் பகீர்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மருதகுளத்தில் மாரியப்பன் என்பவர் வீட்டுக்கு இந்த மாதம் மின் கட்டணமாக ஒரு கோடியே 61 லட்சம் ரூபாய் என பில் அனுப்பியுள்ளது மின்வாரியம். அதிகாரிகள் கூறுகையில் மின் ஊழியர்கள் பற்றாக்குறையால் அவுட் சோர்சிங் முறையில் நடந்த கட்டண கணக்கெடுப்பில் குளறுபடி நடந்துள்ளதாக தெரிவித்தனர்.திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே மருதகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி சேபா(43) இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். மாரியப்பன் உடல்நலக்குறைவால் சமீபத்தில் உயிரிழந்த நிலையில் சேபா தனது மூன்று குழந்தைகளோடு தந்தை ஆசிர்வாதத்தின் அரவணைப்பில் மருதகுளத்தில் வசித்து வருகிறார். மேலும் சேபா அங்கன்வாடி மையத்தில் பணியாற்றி வரும் நிலையில் செப்டம்பர் மாதத்துக்கான மின் கட்டணத்தை அளவீடு செய்ய மின் ஊழியர்கள் வந்துள்ளார். கட்டணம் அளவீடு எடுத்து விட்டுச் சென்ற நிமிடங்களில் சேபாவின் செல்போனிற்கு வந்த குறுந்தகவலில் மின் கட்டணம் ஒரு கோடியே 61 லட்சத்து 31 ஆயிரத்து 281 என வந்ததைக் கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார்.வழக்கமாக அதிகபட்சம் 500 ரூபாய் மட்டுமே கட்டணம் வரும் நிலையில் திடீரென கோடிக்கணக்கில் மின் கட்டணம் வந்ததைக் கண்டு மிரண்டு போன சேபா மூலைக்கரைப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் இதுதொடர்பாக முறையிட்டார் அதன் பெயரில் இன்று மின் ஊழியர்கள் சேபா வீட்டுக்கு சென்று மின்மீட்டரை பரிசோதனை செய்தபோது அளவீடு செய்ததில் குளறுபடி நடந்தது தெரியவந்தது. இதையடுத்து மீண்டும் கணக்கெடுப்பு நடத்தி குளறுபடியை சரி செய்தனர் அதன்படி சேபாவுக்கு வெறும் 494 ரூபாய் மட்டுமே மின் கட்டணம் வந்தது. இந்த குளறுபடி குறித்து நாங்குநேரி உதவி செயற்பொறியாளர் ஆஷாவிடம் கேட்டபோது, மின் கட்டணம் அளவீடு செய்த போது நடந்த தவறால் இந்த பிரச்னை வந்துள்ளது. அதாவது சேபா வீட்டில் எங்கள் ஊழியர் ரீடிங் எடுக்கும்போது சரியான மின் அளவு 14109 KWH என காட்டி உள்ளது. ஆனால் அவர் அதை கணினியில் பதிவேற்றம் செய்யும்போது தவறுதலாக 1410907 KWH என பதிவேற்றம் செய்துவிட்டார். எண் கூடுதலாக சேர்க்கப்பட்டதால் லட்சக்கணக்கிலான யூனிட் மின்சாரம் பயன்படுத்தியதாக மின் கட்டணம் வந்துள்ளது. இது குறித்த தகவல் கிடைத்தவுடன் மூலைக்கரைப்பட்டி உதவி பொறியாளர் மூலம் செயற்பொறியாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டு பிரச்னை உடனடியாக சரி செய்யப்பட்டது என்று கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ramesh
செப் 04, 2025 17:46

இதுவே தவறுதலாக 5000 ரூபாய் என்று வந்து இருந்தால் அலுவலர்களிடம் எவ்வளவு முறையிட்டால் எந்த நடவடிக்கையும் இருந்து இருக்காது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை