கடைகளின் பெயர் பலகை வியாபாரிகள் கோரிக்கை ஏற்பு
சென்னை:தமிழக உணவுப் பொருள் வியாபாரிகள் சங்க கவுரவ ஆலோசகர் எஸ்.பி.ஜெயப்பிரகாசம் கூறியதாவது:தமிழக அரசு, 'எங்கும் தமிழ், எதிலும் தமிழ்' என்பதை வலியுறுத்தி, கடை, வணிக நிறுவனங்களின் பெயர் பலகையில், முதல் எழுத்து தமிழில் இருக்க வேண்டும் என்றும், அடுத்து வரும் எழுத்துகள் எந்த மொழியில் வேண்டுமானாலும் இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. பலரும் தங்களின் குடும்பத்தில் உள்ள மூதாதையர்களின் பெயர்களையே, கடை பெயர் பலகையில், 'இனிஷியல்' எனப்படும் முதல் எழுத்தாக வைத்துள்ளனர். இதை தமிழில் மொழி பெயர்க்கும்போது, மூதாதையர்களின் பெயருக்கான அர்த்தம் மாறி விடுகிறது. எனவே, இந்த பிரச்னை குறித்து, தொழிலாளர் நலத்துறை செயலர் வீரராகவ ராவிடம் தெரிவித்தோம். அதை ஏற்றுக்கொண்ட அவர், கடையின், 'லோகோ' அல்லது முதல் எழுத்து ஆங்கிலத்தில் இருக்கலாம் என்றும், என்ன வியாபாரம் என்று குறிப்பிடுவதை மட்டும், தமிழில் எழுதும்படியும் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.