உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கால்நடை மருந்தகங்களில் மருந்து தட்டுப்பாடு தனியார் மருந்தகங்களுக்கு டாக்டர்கள் பரிந்துரை

கால்நடை மருந்தகங்களில் மருந்து தட்டுப்பாடு தனியார் மருந்தகங்களுக்கு டாக்டர்கள் பரிந்துரை

சென்னை:தமிழகம் முழுதும் உள்ள அரசு கால்நடை மருத்துவமனை மற்றும் மருந்தகங்களில், மருந்து தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், சிகிச்சைக்கு வரும் கால்நடைகளுக்கு தேவையான மருந்துகளை, தனியார் மருந்தகங்களில் வாங்க, அரசு கால்நடை மருத்துவர்கள் பரிந்துரைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தமிழகம் முழுதும், கால்நடை பராமரிப்பு துறையின் கீழ், 3,869 கால்நடை நிலையங்கள், மருந்தகங்கள், மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், கால்நடைகளுக்கான செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை, தடுப்பூசி போடுதல், குடற்புழு நீக்கம் செய்தல், நோய்களுக்கு சிகிச்சை அளித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

குற்றச்சாட்டு

கிராமங்களில் கால்நடை வளர்ப்போர், கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்க, அரசு கால்நடை மருத்துவமனைகளையே நம்பி உள்ளனர். ஆனால் அவர்களை, அரசு கால்நடை மருத்துவர்கள் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருச்சி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில், கிராமங்களில் உள்ள, கால்நடை மருத்துவமனைகளில், சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் மற்றும் ஊசிகள் இல்லை.எனவே, கால்நடை மருத்துவர்கள், கால்நடைகளுக்கு தேவையான மருந்துகளை தனியார் மருந்தகங்களில் வாங்க, பரிந்துரை செய்கின்றனர். கால்நடைகளை காப்பாற்ற வேறு வழியின்றி, கால்நடை வளர்ப்போர், தனியார் மருந்தகங்களில் மருந்து வாங்குகின்றனர்.

நடவடிக்கை

இது குறித்து, தமிழக விவசாயிகள் சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி கூறியதாவது:அரசு கால்நடை மருத்துவமனைகளில், போதிய மருந்துகள் இல்லை. எனவே, கால்நடை மருத்துவர்கள், தனியார் மருந்தகங்களில் மருந்துகளை வாங்கி, கால்நடைகளை சிகிச்சைக்கு அழைத்து வருவோரிடம் விற்கின்றனர். சிலர் வெளியில் மருந்து வாங்கிக் கொள்ளும்படி கூறுகின்றனர். இதனால், கால்நடை வளர்ப்போர் மருந்து வாங்க முடியாமல் சிரமப்படும் நிலை உள்ளது. எனவே, அரசு கால்நடை மருத்துவமனைகளில், போதிய மருந்துகள் கிடைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ஈசன் முருகசாமி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ