உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சொந்த காரில் ரோந்து சென்ற எஸ்.ஐ., விபத்தில் சிக்கி உடன் வந்த நண்பர் பலி

சொந்த காரில் ரோந்து சென்ற எஸ்.ஐ., விபத்தில் சிக்கி உடன் வந்த நண்பர் பலி

துாத்துக்குடி:தன் சொந்த காரில், நண்பர்களுடன் எஸ்.ஐ., ரோந்து சென்றபோது, கார் விபத்தில் சிக்கியதில், வாலிபர் ஒருவர் உயிரிழந்தார்; நான்கு பேர் காயம்அடைந்தனர்.துாத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் காவல் நிலைய எஸ்.ஐ., மாதவராஜா, 39, போலீஸ்காரர் அற்புதசாமி ஆகியோர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். எஸ்.ஐ., மாதவராஜாவுக்கு சொந்தமான, 'பியட் புன்டோ' காரில் அவர்கள் ரோந்து சென்றனர்.காரை மாதவராஜா ஓட்டிய நிலையில், அவரது நண்பர்களான எட்டையபுரம் தெற்கு ரத வீதியை சேர்ந்த அருண்குமார், 29, ராஜா, 30, கார்த்திக், 31, ஆகியோரும் சென்றுஉள்ளனர். தாப்பாத்தி, முத்தலாபுரம், சிந்தலக்கரை உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்ட நிலையில், நேற்று அதிகாலை, 4:00 மணியளவில் மதுரை - துாத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை வழியாக எட்டையபுரம் திரும்பிக் கொண்டிருந்தனர்.சிந்தலக்கரை துரைச்சாமிபுரம் விலக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை நடுவே இருந்த தடுப்பு சுவர் மீது மோதி எதிர்புறம் உள்ள சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், காரில் இருந்த அருண்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.காயமடைந்த எஸ்.ஐ., மாதவராஜா, அற்புதராஜா, கார்த்திக், ராஜா ஆகியோரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து தொடர்பாக எட்டையபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பணியில் இருந்த போது, சொந்த காரில், அதுவும் நண்பர்களை உடன் அழைத்துக் கொண்டு எதற்காக ரோந்து சென்றார் என, மாதவராஜாவிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை