சிலம்பத்தில் அசத்தும் மாணவன் அரசிடம் நிதி உதவி எதிர்பார்ப்பு
வந்தவாசி: சர்வதேச சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற மாணவன், மீண்டும் தாய்லாந்தில் நடக்க உள்ள சர்வதேச போட்டியில் பங்கேற்க பண வசதி இன்றி, அரசிடம் நிதி உதவி எதிர்பார்த்து காத்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த அத்திப்பாக்கத்தை சேர்ந்தவர் விவசாய கூலி தொழிலாளி தம்பிராஜா, 35. இவரது மகன் சேதுராமன், 12. அப்பகுதி அரசு பள்ளியில், 7ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், சிலம்பம் போட்டியில் மாவட்ட, மாநில அளவிலான பல போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ள நிலையில், நவ., 1ம் தேதி கோவாவில் நடந்த அமெரிக்கா, சீனா உள்ளிட்ட, 12 நாடுகள் பங்கேற்ற சர்வதேச சிலம்பம் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றார். இந்நிலையில், வரும் பிப்., மாதம் தாய்லாந்தில் சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டி நடக்க உள்ளது. இதில் பங்கேற்க மாணவனுக்கு அழைப்பு வந்துள்ளது. ஆனால், வறுமை காரணமாக போட்டியில் பங்கேற்க முடியாத நிலை உள்ளது. அரசு உதவி செய்ய, மாணவன் சேதுராமன் கோரிக்கை விடுத்துள்ளார்.