சிவகாசி 2024 ஆண்டு காலண்டர்: ரூ.350 கோடிக்கு மேல் வர்த்தகம்
சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 300 காலண்டர் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன. தமிழகத்தில் உற்பத்தியாகும் மொத்த காலண்டர்களில் 90 சதவீதம் சிவகாசியில் தயாராகிறது. 2024 ஆண்டுக்கான காலண்டர் 5 சதவீதம் விலை உயர்ந்தது. மொத்தமாக சிவகாசியில் ரூ.400 கோடி வரை காலண்டர் வியாபாரம் நடக்கும். தற்போது 2024 க்கான காலண்டர்கள் 2024 ஜன., மாதத்தின் பாதி வரை ஆர்டர் பெறப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். தற்போது 95 சதவீதம் விற்பனை முடிந்த நிலையில் ஜன., இறுதியில் ரூ. 400 கோடி வரை வியாபாரம் நடக்க வாய்ப்புள்ளது.காலண்டர் உற்பத்தியாளர்கள் கூறியதாவது: சென்றாண்டை விட இந்தாண்டு ஐந்து சதவீதம் விலை உயர்ந்த நிலையில் காலண்டர் விற்பனை இதுவரை ரூ.350 கோடிக்கும் மேல் நடந்துள்ளது.சமீபத்தில் பெய்த மழையால் தென் மாவட்டங்கள், சென்னை பாதிக்கப்பட்ட நிலையில் காலண்டர் ஆர்டர் கொடுக்கப்பட்டும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்ப முடியாமல் தேக்கமடைந்தது. இயல்பு நிலை திரும்பிய பின் காலண்டர்கள் அனுப்பப்பட்டன. லோக்சபா தேர்தல் வரவுள்ள நிலையில் 10 சதவீதம் காலண்டர்கள் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றனர்.