உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சீன நாட்டினர் அனுப்பிய நவீன சாதனம் வாயிலாக பண மோசடிக்கு முயற்சி செய்த ஆறு பேர் கைது

சீன நாட்டினர் அனுப்பிய நவீன சாதனம் வாயிலாக பண மோசடிக்கு முயற்சி செய்த ஆறு பேர் கைது

சென்னை; சீன நாட்டினர் அனுப்பி வைத்த, 'சிம் பாக்ஸ் கேட்வே' என்ற அதி நவீன சாதனம் வாயிலாக, ஆன்லைனில் பண மோசடிக்கு முயற்சி செய்த ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து, மாநில சைபர் குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: சீனாவை சேர்ந்த சைபர் குற்றவாளிகள், நம் நாட்டில் கைநிறைய கமிஷன் தொகை தருவதாக ஆசை காட்டி, பலரை மூளைச்சலவை செய்து, ஆன்லைன் வாயிலாக பண மோசடி செய்யும் அடிமைகளாக மாற்றி வருகின்றனர். இதற்காக, சீனாவில் இருந்து, 'சிம் பாக்ஸ் கேட்வே' என்ற சாதனத்தை அனுப்பி வைக்கின்றனர். அந்த சாதனத்தில், ஒரே நேரத்தில், 50க்கும் மேற்பட்ட சிம்கார்டுகளை பயன்படுத்த முடியும். அந்த சாதனம் வெளிநாடுகளில் இருந்து வரும் சர்வதேச அழைப்புகளை, சட்ட விரோதமாக உள்ளூர் அழைப்புகளாக மாற்ற பயன்படுத்தப்படுகிறது. சீனாவை சேர்ந்த சைபர் குற்றவாளிகள், 14 'சிம் பாக்ஸ் கேட்வே' சாதனத்தை, தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். சொன்னபடி கமிஷன் தொகை தராததால், தங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சாதனத்தை திருப்பி தந்து விடுவதாக, சீன மோசடி கும்பல்களிடம், தமிழகத்தை சேர்ந்த நபர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சீன மோசடி கும்பல், சென்னை வில்லிவாக்கம் ராஜமங்கலம் தெருவை சேர்ந்த சரத்குமார், 27 என்பவரிடம், அந்த சாதனங்களை ஒப்படைக்க உத்தரவிட்டது தெரிய வந்தது. சரத்குமாரை கண்காணித்த போது, தன் சகோதரர் இம்மானுவேலுடன் சேர்ந்து, அந்த சாதனங்களை அவர் வீட்டில் வைத்திருந்ததை கண்டறிந்தோம். அதைத் தொடர்ந்து, அவரை பிடித்து விசாரித்தோம். அவர் அளித்த வாக்குமூலத்தில், ''பண மோசடி செய்ய, சீன நாட்டினர் என்னிடம் நடப்பு வங்கி கணக்குகளை துவக்க வேண்டும் என, கட்டளையிட்டனர். இது தொடர்பாக, வில்லிவாக்கத்தில் தனியார் வங்கியில் மேலாளராக உள்ள சரவணகுமார், 35 என்பவரை சந்தித்தேன். அவர் போலி ஆவணங்கள் வாயிலாக, வங்கி கணக்குகள் துவங்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ''அதற்கு லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கினார். மேலும், அதிக பண பரிவர்த்தனை நடந்தால், போலீசார் வங்கி கணக்கை முடக்கி விடுவர். எனவே, அறக்கட்டளை பெயரில், வங்கி கணக்கு துவக்கி தருவதாகவும் வாக்குறுதி அளித்து உள்ளார்,'' என்று கூறினார். இதையடுத்து, சரவண குமாரை கைது செய்தோம். மேலும், சிம் பாக்ஸ் கேட்வே சாதனத்தை பயன்படுத்த, சிம் கார்டுகளை சப்ளை செய்த மதுரையை சேர்ந்த பாண்டீஸ்வரி,25, கைது செய்யப்பட்டார். இதுவரை, சீன நாட்டினர் ஆட்டி வைத்த கைப்பாவை போல செயல்பட்ட, ஆறு பேரை கைது செய்துள்ளோம். 14 சிம் பாக்ஸ் கேட்வே சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ganesun Iyer
ஆக 30, 2025 08:06

பாஸ்ட் ட்ராக்ல விசாரணை நடத்தி குற்றம் நிருபிக்க பட்டால் இவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்தால் சைனாகாரனுக்கும் சேர்த்து போட மாட்டார்கள் ஆனாலும் தண்டனையை எல்லா ஊடகங்களும் பெரிது படுத்தினால்.. பயம் வரும்..


முக்கிய வீடியோ