உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கனமழையால் தென் மாவட்டங்கள் ஸ்தம்பித்தன

கனமழையால் தென் மாவட்டங்கள் ஸ்தம்பித்தன

வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில், நேற்று அடைமழை வெளுத்து வாங்கியது. இதனால், குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இதற்கிடையே, வங்கக்கடலில் அடுத்த காற்றழுத்தத் தாழ்வு உருவாக உள்ளதாகவும், மழை இன்னும் வலுக்கும் என்றும், எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் பீதி ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. 'பெஞ்சல்' புயல் காரணமாக, வடமாவட்டங்களான விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, வேலுார், ராணிப்பேட்டை உள்ளிட்டவற்றில், மழை கொட்டித் தீர்த்தது. இந்த பாதிப்பில் இருந்து, இம்மாவட்டங்கள் மெல்ல மீண்டு வந்த நிலையில், தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தில் சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.இதில், மன்னார் வளைகுடா, இலங்கை கடற்பகுதியில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடியில் அதி கனமழைக்கான, 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.அதற்கு ஏற்ப, நேற்று முன்தினம் மாலை முதல், இம்மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு, மாஞ்சோலை எஸ்டேட் பகுதிகளில் அடைமழை கொட்டியது. இதில், ஊத்து பகுதியில், அதிகபட்சமாக, 54 செ.மீ., மழை பதிவானது. மாவட்டத்தின் சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம் மற்றும் அதைச் சுற்றிஉள்ள பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது. தென்காசி மாவட்டத்தில், குற்றாலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. திருநெல்வேலி டவுன் பகுதியில் பெய்த மழையால், ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலைய பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன. விருதுநகர் மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையால், 22 வீடுகள் சேதமடைந்தன. கண்மாய்களில் உடைப்பு ஏற்பட்டு பயிர்கள் நீரில் மூழ்கின. இம்மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதலே கனமழை கொட்டி தீர்த்தது. சிவகாசி, சாத்துார், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், அருப்புக்கோட்டை, காரியாபட்டி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பரவலான மழையும், ஆங்காங்கே கனமழையும் பெய்தது.மாவட்டத்தில் அதிகபட்சமாக வெம்பகோட்டையில், 14 செ.மீ., மழை பதிவானது. ஸ்ரீவில்லிபுத்துார் வடபத்ரசயனர் சன்னிதியில் மழைநீர் தேங்கியது. விருதுநகரில் வடிகால்களை சரியாக துார்வாரததாலும், ரோடுகள் பள்ளமாக இருந்ததாலும் மழைநீர் நீண்ட நேரம் கழித்து வடிந்தது. மழைக்கு, 22 வீடுகள் சேதமடைந்தன.திருச்சுழி காளையார்குளம் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்தது. வெம்பக்கோட்டை சிப்பிப்பாறை, பரளச்சி பெரிய கண்மாய்களிலும் உடைப்பு ஏற்பட்டது. இப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர், வெங்காயம், மக்காச்சோளம் தண்ணீரில் மூழ்கின. சாத்துார் நல்லி கிராமத்தில் தற்காலிகபாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகினர்.

துாத்துக்குடி

துாத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் பலத்த மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கோவில்பட்டியில், 36.4 செ.மீ. மழை பதிவானது.தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், தாமிரபரணி ஆற்றில், 75,000 கன அடி தண்ணீர் செல்கிறது. இதனால், துாத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஏரல் தாலுகாவில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள 20 கிராமங்களை சேர்ந்த, 700 பேர் நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.துாத்துக்குடியில் இருந்து திருச்செந்துார் செல்லும் சாலையில் உள்ள முக்காணி பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மாற்றுப்பாதையாக முக்காணி, ஏரல், பேட்மாநகரம், ஆழ்வார்தோப்பு, ஆழ்வார்திருநகரி, குரும்பூர் வழியாக திருச்செந்துார் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.துாத்துக்குடி அருகே பொட்டலுாரணி - கீழசெக்காரக்குடி கிராமங்களுக்கு இடையேயான தரைப்பாலத்தில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. செய்துங்கநல்லுார் --- கொங்கராயக்குறிச்சி, தாதன்குளம் -கிளாக்குளம், ஆழ்வார்தோப்பு -ஆழ்வார்திருநகரி இடையேயான பாலங்களில் தண்ணீர் செல்வதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.கிழக்கு கடற்கரை சாலையில் பட்டினமருதுார் --- குளத்துார் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துண்டிக்கப்பட்ட பகுதிகளில் செல்லும் வாகனங்கள் மாற்றுப்பதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவில்பட்டி

கோவில்பட்டி மற்றும் கயத்தாறு, கழுகுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, 100க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. 30க்கும் மேற்பட்ட வீடுகள் முழுதும் மழை நீரால் நிரம்பி உள்ளதால். அங்குள்ள மக்கள் லாயல் மில் காலனியில் உள்ள சமுதாய கூட்டத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.காமநாயக்கன்பட்டியில் உள்ள தாரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், கோவில்பட்டி --- பசுவந்தனை இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி நகர் முழுதும் சாலைகளில் மழைநீர் வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடுகிறது. கோவில்பட்டி இ.எஸ்.ஐ., மருந்தகத்தின் பின்பகுதி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. மாவட்டம் முழுதும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், நீர்நிலை பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றங்கரையோரப் பகுதிகளை அதிகாரிகள் கண்காணித்து வருவதாக கலெக்டர் இளம்பகவத் தெரிவித்தார்.இதற்கிடையே, தென்மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், வங்க கடலில் உருவாக உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, 16ம் தேதி முதல் மீண்டும் மழை தீவிரமடையும் என்பதாலும் பீதி ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் எங்கெங்கு கனமழை?

இடம் - மழை அளவு (செ.மீ.,யில்)ஊத்து - -- 54அம்பாசமுத்திரம் --- 36.6 கனடியன் -- 35.1 காக்காச்சி --- 35மாஞ்சோலை --- 32நாலுமுக்கு --- 31மணிமுத்தாறு --- 29.8சேரன்மகாதேவி --- 22.5 சேர்வலாறு --- 23.7

நெல்லை வெள்ளத்திற்கு ஆக்கிரமிப்பே காரணம்

திருநெல்வேலி மாநகராட்சியை ஒட்டியுள்ள, திருநெல்வேலி கால்வாய், பாளையங்கால்வாய், கோடகன் கால்வாய்களை துார் வாராததால் மழை நீர் ஊருக்குள் புகுந்தது. திருநெல்வேலி டவுன் பகுதியில் கால்வாயில் வந்த மழை நீர் கல்லணை தெரு, முகமது அலி தெரு உள்ளிட்ட தெருக்களுக்குள் புகுந்தது. நயினார்குளம் நிரம்பி செல்லும் மழைநீர் திருநெல்வேலி ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள, 20 அடி அகல ஓடை வழியே தாமிரபரணி ஆற்றுக்குள் செல்லும். அப்பகுதியில் இரண்டு ஓடைகளை ஆக்கிரமித்து வணிக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.குறிப்பாக, ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டிற்கு வடபுறம், 20 அடி அகல ஓடைக்கு மேல் ஒரு டிரான்ஸ்பார்மர் மற்றும் அதையொட்டிய கட்டடங்களை கட்டி, 20 அடி அகல ஓடையை 5 அடி ஓடையாக குறுக்கி விட்டனர். 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமித்துள்ள கட்டடங்களை எந்த அரசும், அதிகாரிகளும் அகற்ற முன்வரவில்லை. நோட்டீஸ் வழங்கவும் இல்லை. இதனால், பருவமழையின் போது ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன் முதல் பஸ் ஸ்டாண்ட் வரை உள்ள வணிக வளாகங்களுக்குள் தண்ணீர் செல்கிறது. 2023 டிச., 17, 18ல் ஏற்பட்ட வெள்ளத்தினால் 100க்கும் மேற்பட்ட கடைகளில் வெள்ளம் புகுந்தது. பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமுற்றன. அந்த இழப்பிலிருந்து மீள்வதற்குள் தற்போதும் மீண்டும் கடைகளுக்குள் மழை நீர் புகுந்தது.நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு, நேற்று திருநெல்வேலி வந்தார். ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் மழை நீர் தேங்கிய பகுதியை பார்வையிட்டார். அப்போது, அதிகாரிகள் கண் துடைப்பாக இயந்திரங்களை கொண்டு ஓடைக்கு மேல் உள்ள சிமென்ட் தரைகளை உடைத்து தண்ணீரை ஓடைக்குள் விட்டனர்.நேரு கூறுகையில், ''கடந்த ஆண்டு பலத்த மழையால் வெள்ளம் ஏற்பட்டது. தற்போது ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டில் உள்ளது வெள்ளம் அல்ல; மழை நீர் தேக்கம் தான். ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றி, இருபுறமும் சுவர் அமைத்து வாய்க்கால் கட்டி அதன் மேல் ரோடு அமைக்கப்படும். ஆக்கிரமிப்புகளால் தான் மழை நீர் செல்ல முடியவில்லை. முழுமையாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். இன்று முதல் ஆக்கிரமிப்பு அகற்றம் துவங்கும்,'' என்றார்.திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் 26 வணிக கட்டடங்கள் உட்பட 102 கட்டடங்கள் அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ளன. அவற்றிற்கு மூன்று முறை நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அதன் பிறகும் நான்கு கட்டடங்களுக்கு மட்டுமே அதிகாரிகள் அண்மையில் சீல் வைத்தனர். மற்ற கட்டட உரிமையாளர்களுடன், 'சமாதான' பேச்சு நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.- நமது நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Krishnan M
டிச 16, 2024 04:37

யாரையும் குறை கூறி பயனில்லை. விழிப்புடன் இருந்து செயல்படுவது தான் சிறந்தது.


sridhar
டிச 14, 2024 20:52

தூத்துக்குடி நாலுமாவடியில் ஒருவன் உட்கார்ந்த இடத்தில இருந்தே அமெரிக்காவில் உள்ள ஒருவன் நோயை குணப்படுத்தினானாம் . வருடா வருடம் ஜனவரி மாசம் இந்த வருஷம் என்னென்ன நடக்கும் என்று சொல்வானாம் . ஆனால் தூத்துக்குடி வெள்ளம் பற்றி போன வருஷமும் சொல்லல , இந்த வருஷமும் சொல்லல . அவன் எங்கே .


Bahurudeen Ali Ahamed
டிச 14, 2024 14:35

இயற்கை பேரழிவுகளை எந்த அரசினால் கட்டுப்படுத்த முடியும்?, எவ்வளவு பெரிய அரசாங்கமானாலும் இயற்கைக்கு முன் அனைவரும் வெறும் மனிதர்களே, என்ன ஒன்று குளம் குட்டைகளை தூர் வாரியிருக்கலாம், கழிவு நீர்ப்பாதைகளை சுத்தப்படுத்தியிருந்தால் சேதங்களை குறைத்திருக்கலாம், இனிமேலாவது அரசாங்கம் மெத்தனமாக செயல்படாமல் எதிர்கால நன்மைக்கான காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்


sridhar
டிச 14, 2024 20:59

மயிலிறகால் திமுகவை வெளுத்து வாங்கி விட்டீர்கள் .


Balachandran Rajamanickam
டிச 14, 2024 13:09

சென்னைலே மழை வந்த MM ல, மத்த டிஸ்டிக்ட்ல மழை வந்த CM ல என்ன லாஜிக்?


sridhar
டிச 14, 2024 12:47

திமுகவுக்கா போட்டே , திமுகவுக்கா போட்டே என்று சொல்லி சொல்லி அடிக்குது இயற்கை .


sivakumar Thappali Krishnamoorthy
டிச 14, 2024 12:33

இந்த மழை மக்கள் சொத்து அழியனும் ஒவ்வொருத்தனும் பிட்சை எடுக்கணும் தி மு க சாதகமா அமையனும். மீண்டும் காசு கொடுத்து நிவாரணம் ஒட்டு VANKANUM.


sivakumar Thappali Krishnamoorthy
டிச 14, 2024 12:29

ஒரு சுனாமி வந்து மரீனா கடற்கரையில் இருந்து ஒரு 7 கிலோமீட்டர் உள்ளே வரை புகுந்து வெளியே வரனும்.


Kasimani Baskaran
டிச 14, 2024 11:24

குறிப்பாக மாடல் அரசு மீதி பழி போடக்கூடாது.


angbu ganesh
டிச 14, 2024 09:24

பாதிக்க பட்ட மக்கள் அனைவரும் பனையூருக்கு வாங்க அங்க உங்களுக்கு ஒருத்தர் உதவி பண்ண காத்திருக்கர், எப்படியாச்சும் வந்திடுங்க, flight பஸ் கப்பல் பிடிச்சவது வந்திருங்க அவர் வர மாட்டார் ஆனா வோட்டு வாங்க வந்தாலும் வருவார் இல்ல அதுக்கும் நீங்க பனையூர் வரவேண்டி இருக்கும்


angbu ganesh
டிச 14, 2024 09:23

இங்க ஒருத்தன் அத பத்தி எல்லாம் யோசிக்காம ஒரே நாடு ஒரே தேர்தல் கூடாதுன்னு பேசறார் பெரியாருக்கு விழா எடுக்கரரார் மக்கள் செத்தா என்ன இருந்தா என்ன அது 2026-குத்தான் தேவ அது வரைக்கும் மக்கள் தேவ இல்லேன்னு இருக்கார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை