அடுத்த அடியை நிதானமாக எடுத்து வைக்க நவ., 5ல் சிறப்பு பொதுக்குழு: நடிகர் விஜய்
சென்னை: 'த.வெ.க., சிறப்பு பொதுக்குழுக் கூட்டம், நவ., 5ம் தேதி மாமல்லபுரத்தில் நடக்க உள்ளது' என, அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்துள்ளார். அவரது அறிக்கை: சூழ்ச்சியாளர்கள், சூது மதியாளர்கள், துச்சமாக எண்ணி அவதுாறு செய்த போதிலும், அச்சமின்றி அத்தனையையும் உடைந் தெறிந்துவிட்டு, தமிழக மக்களுக்காக, ஆர்த்தெழ வேண்டிய தருணம் இது. படைகலன்களாக த.வெ.க., தொண்டர்களும், காக்கும் கவசமாக, தமிழக மக்களும் இருக்கின்றனர். மக்களுடன் நமக்குள்ள உறவையும், அவர்களுக்கான குரலாக தொடரும், நம் வெற்றி பயணத்தையும், எவராலும் தடுக்க இயலாது. இதை நான் சொல்ல வேண்டியதில்லை. கடந்த ஒரு மாத காலமாகவே, தமிழக மக்கள், இதை மவுன சாட்சியாக, உலகிற்கு உரைத்து கொண்டு இருக்கின்றனர். சூழ்ச்சிகளாலும், சூதுகளாலும், நம்மை வென்று விடலாம் என, கனவு காணும் எதிரிகளும், இதை உணர்ந்தே உள்ளனர். கள நிலவரம் நம்மை ஊக்குவிப்பதாக இருக்கிறது. நமது அடுத்த அடியை, இன்னும் நிதானமாகவும், தீர்க்கமாகவும் எடுத்து வைக்க வேண்டும். இத்தகைய சூழலில், கட்சியின் அடுத்தகட்ட தொடர் நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க வேண்டும். இது குறித்து முடிவெடுக்க, பொதுக்குழுவின் சிறப்பு கூட்டத்தை கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. நவ., 5ம் தேதி மாமல்லபுரம் போர் பாயின்ட்ஸ் பை ஷெரட்டன் ஓட்டலில், காலை 10:00 மணிக்கு சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடக்க உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.