உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்ஸ்பெக்டர் போல போலி கையெழுத்து; சிறப்பு எஸ்.ஐ.,க்கு 3 மாத சிறை தண்டனை

இன்ஸ்பெக்டர் போல போலி கையெழுத்து; சிறப்பு எஸ்.ஐ.,க்கு 3 மாத சிறை தண்டனை

சென்னை : குற்றப்பத்திரிகையில், போலீஸ் இன்ஸ்பெக்டரின் கையெழுத்தை போலியாக பதிவு செய்த சிறப்பு எஸ்.ஐ.,க்கு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மூன்று மாதங்கள் சிறை தண்டனை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடும்ப பிரச்னை தொடர்பாக, தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, ஐக்கிய அரபு நாடுகளில் பணிபுரியும், திருவாரூரைச் சேர்ந்த பன்னீர்செல்வம் பிரதீபன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில், கடந்த 2023ல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரருக்கு எதிராக, வலங்கைமான் காவல் நிலையத்தில் உள்ள வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. 'லுக் அவுட் நோட்டீஸ்' இந்த உத்தரவை மீறி, விசாரணை நீதிமன்றத்தில், வலங்கைமான் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்; பன்னீர்செல்வம் பிரதீபனுக்கு எதிராக, 'லுக் அவுட் நோட்டீஸ்' பிறப்பித்தனர். இதை எதிர்த்து, பன்னீர்செல்வம் பிரதீபன் மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த, நீதிபதி பி.வேல்முருகன், திருவாரூர் எஸ்.பி., நன்னிலம் டி.எஸ்.பி., மற்றும் வலங்கைமான் இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்தார். இந்த வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான எஸ்.பி., கருண் காரத், ''இந்த விவகாரம் குறித்த விசாரணையில், வலங்கைமான் இன்ஸ்பெக்டராக இருந்த ரங்கராஜன், 2023 நவ., 16ல் இடமாற்றம் செய்யப்பட்டார். ''அதையடுத்து, அவரின் கையெழுத்தை, சிறப்பு எஸ்.ஐ.,யாக இருந்த சங்கர் மோசடியாக போட்டு, கடந்தாண்டு மே 22ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளார்,'' என, விளக்கம் அளித்தார். மோசடி செயல் இதை பதிவு செய்த நீதிபதி, சிறப்பு எஸ்.ஐ., சங்கரை, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் எதிர் மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிறப்பு எஸ்.ஐ., சங்கர் நேரில் ஆஜராகி, இன்ஸ்பெக்டர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததாக விளக்கம் அளித்தார். இதை கேட்ட நீதிபதி பி.வேல்முருகன், ''குற்றப்பத்திரிகையில் இன்ஸ்பெக்டரின் கையெழுத்தை ஏன் போட வேண்டும்; உங்கள் கையெழுத்தை தானே போட்டிருக்க வேண்டும். ''இது மோசடி செயல்,'' என கூறியதுடன், சிறப்பு எஸ்.ஐ., சங்கருக்கு, மூன்று மாதங்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை