சட்டவிரோத வெளிநாட்டினரை தடுக்க சிறப்பு குழு: காடேஸ்வரா
திருப்பூர்: ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: தமிழகத்தில் தொடர்ந்து பல மாவட்டங்களில் ஆவணங்கள் எதுவுமின்றி வங்கதேசத்தினரின் ஊடுருவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் வடமாநிலத்தவர் போர்வையில், இவர்கள் குடியேறி வருகின்றனர். திருப்பூர் சிறுபூலுவபட்டி, கே.செட்டிபாளையம் பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டு, ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். அதில், ஒருவர் ௧௦ ஆண்டுகளாக சட்டவிரோதமாக தங்கியிருப்பது தெரிந்தது. கடந்த ஜன., மாதத்தில் தேசிய புலனாய்வு முகமை நடத்திய சோதனையில், பல்லடத்தில் மட்டும் 31 பேர் கைது செய்யப்பட்டனர். வங்கதேசத்திலிருந்து கடல் வழியாகவும் நம் நாட்டுக்குள் நுழைகின்றனர். தமிழகத்தை குறிவைத்து, ஏ.பி.டி., எனப்படும் வங்கதேச பயங்கரவாத அமைப்பு இவர்களை அனுப்புகிறது. தமிழகத்தில் உலவி வரும் கஞ்சா, அபின், ரசாயன போதைப்பொருள் புழக்கத்துக்கு, இந்த கும்பலே காரணம். இந்த ஊடுருவலை தடுக்க, தமிழக அரசிடம் முழுமையான திட்டங்கள் இல்லை. அவர்களை கண்காணிக்கவும், கண்டுபிடிக்கவும் திறமை வாய்ந்த அதிகாரிகளை நியமிக்க வேண்டும். தமிழக அரசு உடனடியாக அன்னிய நாட்டில் இருந்து தமிழகத்தில் ஊடுருபவர்களுக்கு போலி ஆதார் எடுத்து தரும் ஏஜென்ட்களை கண்காணித்து உடனடியாக கைது செய்ய வேண்டும். தமிழகத்தின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு ஊடுருவல்காரர்களை பிடிக்க, தமிழக அரசும், காவல்துறையும் இணைந்து சிறப்பு தனி பிரிவை அமைக்க வேண்டும். மத்திய அரசும் தடுப்பு முயற்சியை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.