காரைக்கால் மீனவருக்கு 6 மாதம் சிறை ரூ.40 லட்சம் அபராதம் விதிப்பு இலங்கை கோர்ட் உத்தரவு
காரைக்கால்: கடலில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவருக்கு இலங்கை கோர்ட்டில் ரூ. 40 லட்சம் அபராதம் மற்றும் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஒன்பது மீனவர்கள் விடுவிக்கப் பட்டனர்.கடலில் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக, புதுச்சேரி மற்றும் தமிழக மீனவர்களை இலங்கை கடல்படை அவ்வப்போது கைது செய்து வருகிறது. கடந்த ஜன., 7ம் தேதி காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கீழகாசாகுடிமேடு மீனவ கிராமத்தை சேர்ந்த செல்வமணி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், கீழகாசாகுடிமேடு அன்பழகன் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் உட்பட 10 பேர் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர்.இவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, இலங்கை கடற்படையினர் கடந்த 9ம் தேதி கைது செய்து, அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நேற்று இந்த வழக்கு இலங்கை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதி, விசைப்படகை இயக்கிய அன்பழகனுக்கு 40 லட்சம் ரூபாய் அபராதமும் ஆறுமாதம் சிறைத்தண்டனையும் விதித்தார். மற்ற 9 மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டார். விடுதலை செய்யப்பட்ட 9 மீனவர்கள் ஓரிரு நாட்களில் சொந்த ஊருக்கு திரும்புவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.