UPDATED : ஜன 05, 2025 05:05 PM | ADDED : ஜன 05, 2025 11:39 AM
சென்னை: 'சிந்துவெளி புதிருக்கு உரிய விடையைக் கண்டறிந்து, சிந்துவெளி எழுத்து முறையை தெளிவாகப் புரிந்துகொள்ள வழிவகை செய்யும் அமைப்பு அல்லது நபருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படும்' என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டு கருத்தரங்கை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அவர், இந்தியத் தொல்லியல் முன்னாள் தலைமை இயக்குனர் ஜான் ஹீபர்ட் மார்ஷல் சிலைக்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: சிந்துவெளி நாகரீகத்தை கடந்த 1924ல் ஜான் ஹீபர்ட் மார்ஷல் உலகிற்கு அறிவித்தார்; இது கடந்தகாலம் குறித்த புரிதலை மாற்றியது. சிந்துவெளி நாகரிகம் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது; மார்ஷலுக்கு சிலை அமைத்து சிறப்பிப்பது தமிழக அரசுக்கு பெருமை.ஜான் மார்ஷலுக்கு சிலை அமைக்கும் பெருமை திராவிட மாடல் அரசுக்கு கிடைத்துள்ளது. 1948ம் ஆண்டிலேயே சிந்துவெளி அடையாளங்களை வெளிகொண்டு வந்தவர் அண்ணாத்துரை. செம்மொழி மாநாட்டில் சிந்துவெளி நாகரிகத்தை அடையாளப்படுத்தியவர் கருணாநிதி. திராவிட மாடல் அரசு ஒரு கட்சியின் அரசு அல்ல; ஒரு இனத்தின் அரசு. நமக்கான அடையாளத்தை நிலைநிறுத்த வேண்டும்.சிந்துவெளியில் இருந்த காளைகள் திராவிடத்தின் சின்னம். தாமிரபரணி நாகரீகம் 3,600 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று உறுதி செய்துள்ளோம். தமிழக சமூகத்தின் தொன்மைகளை அறிவுலகம் ஏற்றுக்கொள்ளத் தொடங்கி இருக்கிறது. இந்திய துணைக் கண்டத்தின் வரலாற்றை தமிழை தவிர்த்துவிட்டு இனி எழுத முடியாது.சிந்துவெளி புதிருக்கு உரிய விடையைக் கண்டறிந்து, சிந்துவெளி எழுத்து முறையை தெளிவாகப் புரிந்துகொள்ள வழிவகை செய்யும் அமைப்பு அல்லது நபருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படும். சிந்துவெளி ஆராய்ச்சியை மேற்கொள்ளும் வகையில், ஐராவதம் மகாதேவன் பெயரில் ஆய்வறிக்கை அமைக்க ரூ.2 கோடி நிதி உதவி வழங்கப்படும். தமிழ்ப் பண்பாட்டை உலகறியச் செய்வதற்காக உழைப்பவர்களில், ஆண்டுதோறும் 2 அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
முயற்சிகள் தொடரும்!
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழின் தொன்மை தொடர்பான தொல்லியல் ஆய்வுகளுக்குப் பெரும் ஊக்கத்தை வழங்கும் முப்பெரும் அறிவிப்புகளை சிந்துவெளி நூற்றாண்டு நிறைவு பன்னாட்டு கருத்தரங்கில் வெளியிட்டுள்ளேன். இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் தமிழின் தலைமையிடத்தை உறுதிசெய்யும் நம் முயற்சிகள் தொடரும்! பொய்ப்புனைவுகளை உடைப்போம்! மெய்ப்பொருள் காண்போம்! ஜான் மார்ஷல் அவர்கள் நூறாண்டுகளுக்கு முன்பு தொடங்கியதை நாம் நிறைவுசெய்வோம்! இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.