சென்னை: 'பா.ஜ., பூச்சாண்டி காட்டி இன்னும் எத்தனை நாட்கள் தமிழக மக்களை ஏமாற்ற முடியும்?' என, முதல்வர் ஸ்டாலினுக்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.அவரது அறிக்கை:பல கோடிகளை கொட்டிக் கொடுத்து, சில கட்சிகளை அடிமைகளாக விலைக்கு வாங்கி, அவர்கள் தயவால் ஆட்சி அமைத்து, ஊழல் ஆட்சியை தி.மு.க., நடத்தி வருகிறது. பல்லாயிரம் கோடி ஊழல் பணத்திற்கு ஆப்பு அடிக்கும் விதமாக, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்ததும், முதல்வர் ஸ்டாலின் அலறித் துடிக்கிறார். தன்னிலை மறந்தார்
பா.ஜ., புகுந்து விடும் என்று பூச்சாண்டி காட்டியே, தமிழக மக்களை கடந்த நான்கு ஆண்டுகளாக, தமிழகத்தில் ஒரு நிர்வாகத் திறனற்ற ஆட்சியை ஸ்டாலின் நடத்தி வந்துள்ளார். அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியால், தன்னிலை மறந்து புலம்ப துவங்கியிருக்கிறார். அமலாக்கத் துறையின் சோதனைகளுக்கு உள்ளான அமைச்சர்களைக் கொண்டு ஆட்சி புரியும் இவர், 'இரண்டு ரெய்டுகளுக்கு பயந்து, அ.தி.மு.க.,வை அடகு வைத்தவர்கள்' என்று புழுதிவாரித் துாற்றுகிறார். என் மீதோ, எங்கள் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் மீதோ, மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் 'ரெய்டு' நடத்தியதாகக் குறிப்பிட்டு சொல்ல முடியுமா? விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்வதில் வல்லமை பெற்றது, தி.மு.க., என்று, நீதியரசர் சர்க்காரியாவால் சான்றிதழ் பெற்ற கூட்டம். வீராணம் திட்ட ஊழல், பூச்சி மருந்து ஊழல், அரிசி பேர ஊழல், சர்க்கரை பேர ஊழல், கோடம்பாக்கத்தில் இருந்த அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியை தனியார் ஒருவருக்கு விற்று, பின்னர் அவரிடமிருந்து, தி.மு.க., கட்சி பத்திரிகை பெயருக்கு மாற்றிய ஜகஜ்ஜால ஊழல் என்று, சர்க்காரியா கமிஷன் பட்டியலிட்டதை, தமிழக மக்கள் மறந்து விட முடியுமா?அன்றைய பிரதமர் இந்திராவின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து, சி.பி.ஐ., வழக்குகளில் இருந்து தப்பியதை, தமிழக மக்கள் மறந்து விட முடியுமா? கொத்தடிமை சாசனம்
கடந்த 2011 சட்டசபை தேர்தலின்போது, காங்கிரஸ் அரசு நடத்திய ரெய்டுக்கு பயந்து, 63 'சீட்'களை அக்கட்சிக்கு கொடுத்து, கொத்தடிமை சாசனம் எழுதிக் கொடுத்து, சாஷ்டாங்கமாக காலில் விழுந்ததை தான், தமிழக மக்கள் மறந்து விட முடியுமா?அன்று முதல் இன்று வரை, காங்கிரஸ் காலடியில் இருந்து எழும் துணிச்சல் இல்லாத புல் தடுக்கி பயில்வான் ஸ்டாலின், எங்களை பார்த்து ஏகடியம் பேசுவது கண்டு, மக்கள் எள்ளி நகையாடுகின்றனர்.அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணியே ஊழல் என்ற ஒரு பெரிய கண்டுபிடிப்பை, ஊழலுக்கும் ஊழலுக்காகவும் பிறந்த இந்த மாமேதை வெளியிட்டிருப்பது வேடிக்கை. பொய் புரட்டுகளை அள்ளி வீசி, அ.தி.மு.க., மீது சேற்றை வாரி இறைத்து, எதிரணியில் இருப்பவர்களை தனித்தனியாக பிரித்து, ஏவல் கட்சித் தலைவர்கள் துணையோடு, மீண்டும் ஆட்சி அமைத்து விடலாம் என்று, பகல் கனவு கண்ட ஸ்டாலினின் தலையில், அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி அறிவிப்பு இடியை இறக்கி இருக்கிறது.அது கொடுத்த வலியின் வேகம் தாங்காமல் ஸ்டாலின் துடிப்பதும், துவள்வதும் அவரது அறிக்கையில் இருந்து தெரிகிறது. உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தாக வேண்டும். ஸ்டாலினும், அவரது குடும்பமும், மந்திரிகளும் கடலையே குடித்திருக்கின்றனர். 2026 சட்டசபை தேர்தலில், இந்த கொள்ளைக் கும்பலுக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட இருக்கின்றனர்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.