உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விவசாயிகளின் கஷ்டம் தெரியாதவர் ஸ்டாலின்: பழனிசாமி கடும் தாக்கு

விவசாயிகளின் கஷ்டம் தெரியாதவர் ஸ்டாலின்: பழனிசாமி கடும் தாக்கு

அன்னுார்; ''விவசாயிகளின் கஷ்டம் தெரியாதவர் முதல்வர் ஸ்டாலின். அ.தி.மு.க., அரசு கொண்டு வந்த திட்டங்களை கிடப்பில் போட்டுள்ளார்,'' என, அன்னுாரில் முன்னாள் முதல்வர் பழனிசாமி பேசினார். அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு நிதி ஒதுக்கி செயல்படுத்திய முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு, அத்திக்கடவு -அவிநாசி திட்ட கூட்டமைப்பு மற்றும் மூன்று மாவட்ட விவசாயிகள் சார்பில், நேற்று கோவை மாவட்டம், அன்னுார் அருகே கஞ்சப்பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. அத்திக்கடவு திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் தலைமை வகித்தார்.தென்னையில் நோய்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் பழனிசாமி பேசியதாவது: அ.தி.மு.க., ஆட்சியின் போது தென்னையில் பூச்சி பாதிப்பு ஏற்பட்டபோது 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், தற்போது தென்னையில் கடும் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், தி.மு.க., அரசு கண்டுகொள்ளவில்லை. விவசாயிகளின் கஷ்டம் தெரியாதவர் ஸ்டாலின்.டெல்டா மாவட்டங்களில் நெல்லை நேரடியாக கொள்முதல் செய்து அவர்களது வங்கி கணக்கில் வரவு வைத்தோம். தற்போது, கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்க முடியாத நிலை உள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் பாதுகாப்பு இல்லாமல் திறந்த வெளியில் வைக்கப்படுகிறது.அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கு 'ஸ்டிக்கர்' ஒட்டி திறப்பு விழா நடத்துகின்றனர் தி.மு.க.,வினர். அக்கட்சியின் ஆட்சி நான்கு ஆண்டுகளில் எந்த புதிய திட்டங்களையும் நிறைவேற்றவில்லை.பிரதமரை நேரில் சந்தித்து, கொப்பரை விலையை உயர்த்தி தரும்படி கூறினேன். உடனே 70 ரூபாயில் இருந்து 113 ரூபாயாக உயர்த்தி தந்தார்.கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்திற்காக பிரதமரை நேரில் சந்தித்தோம். பிரதமரும் திட்டத்திற்கு ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்தார்.அமைச்சர் வேலுமணி, கருப்பண்ணன் உள்ளிட்டோரை தெலுங்கானா மற்றும் ஆந்திராவுக்கு அனுப்பி முதல்வர்களிடமும் பேசி விரிவான திட்ட அறிக்கை தயாரித்தேன். உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு, மூன்று முறை கூடியது. ஆனால், 14,000 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்தத் திட்டத்தை, தி.மு.க., அரசு முடக்கி வைத்துள்ளது.85 சதவீதம் முடிந்ததுதிமுக ஆட்சியில் கழிவுகள் ஆற்றில் கலக்கின்றன. அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை மாநில அரசு நிதி 1,652 கோடி ஒதுக்கி செயல்படுத்தினேன்.அத்திக்கடவு திட்டம் அ.தி.மு.க., ஆட்சியில் 85 சதவீதம் முடிந்து விட்டது. தி.மு.க., ஆட்சியில் வெறும் 15 சதவீத பணியை, ஒரே ஆண்டில் முடித்திருக்க முடியும். ஆனால், அ.தி.மு.க., அரசின் திட்டம் என்பதால் காழ்ப்புணர்ச்சியால் வேண்டுமென்றே கிடப்பில் போட்டு விட்டனர். இப்போது தான் அதை துவக்கி வைத்துள்ளனர்.தற்போது பல லட்சம் விவசாயிகள் பயன்பெறுவதால், நான் பிறவி பயன் அடைந்துள்ளேன். மீண்டும் ஆட்சிக்கு வரும்போது அத்திக்கடவு இரண்டாம் கட்டத் திட்டம், ஆனைமலை - நல்லாறு திட்டம் உள்ளிட்டவை நிறைவேற்றப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை