சென்னை:அரசின் சேவைகள், திட்டங்களை மக்களுக்கு நேரடியாக வழங்கும், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை, சிதம்பரம் நகராட்சியில் வரும் 15ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். மாதம் 1,000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் மட்டுமே வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டு உள்ள அறிக்கை:
கடந்த சட்டசபை கூட்டத்தில், 'மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் பணிகள் துவக்கப்படும்' என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, அனைத்து நகர்ப்புற, ஊரக பகுதிகளில், 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற திட்டம் துவக்கப்படுகிறது. 15ம் தேதி, கடலுார் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். இத்திட்டத்தின் கீழ் நகர்ப்புற பகுதிகளில் 3,768; ஊரக பகுதிகளில் 6,232 என, மொத்தம் 10,000 சிறப்பு முகாம்கள் நடக்கும். அந்த முகாம்களில், நகர்ப்புற பகுதிகளில், 43 சேவைகளும்; ஊரக பகுதிகளில், 46 சேவைகளும் வழங்கப்படும். அத்துடன் பொது மக்களுக்கு மருத்துவ முகாம்களும் நடத்தப்படும்.இத்திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள், ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாக சென்று, முகாம் நடக்கும் நாள், இடம், அங்கு வழங்கப்படவுள்ள அரசு துறைகளின் திட்டங்கள், சேவைகளை விவரிப்பர். அதற்கான தகுதிகள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்த தகவல் கையேட்டையும், விண்ணப்பத்தையும் வழங்குவர். இப்பணி நாளை துவங்கி மூன்று மாதங்கள் நடக்கும். அதில், ஒரு லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.மகளிர் உரிமைத்தொகை பெற தகுதிஇருந்தும் விடுபட்டவர்கள், இந்த முகாம்களில் விண்ணப்பிக்கலாம். மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பம், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது, 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.