அழியும் நிலையில் அயிரை மீன்: கூடுதலாக வளர்க்க நடவடிக்கை
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ''அசைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடும் அயிரை மீன், அழியும் நிலையில் உள்ளது. அதை தவிர்க்க, கூடுதலாக வளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என, அயிரை மீன் ஆராய்ச்சி மைய உதவிப் பேராசிரியர் வேல்முருகன் தெரிவித்தார். இது குறித்து, அவர் கூறியதாவது: அயிரை மீன்கள், ஆறு, குளம், குட்டை, வாய்க்கால் போன்ற நீர் நிலைகளில் வளரக்கூடியவை. இம்மீன்கள் தற்போது அழியும் நிலையில் உள்ளன. இவற்றை பாதுகாக்க, தேனி மாவட்டம், வைகை அணை அருகில், கடந்த ஆண்டு அயிரை மீன் ஆராய்ச்சி நிலையம் துவக்கப்பட்டது. இம்மையத்தில், அயிரை மீன் குஞ்சு வளர்க்கப்பட்டு, மீன் வளர்ப்போருக்கு வினியோகிக்கப்படுகிறது. மேலும், மீன் வளர்ப்பில் ஈடுபடுவோருக்கு, நவீன தொழில்நுட்பம் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. இம்மையங்களில் பயிற்சி பெற்றோர், தேனி, விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் அயிரை மீன் வளர்ப்பில் ஈடுபட்டுஉள்ளனர். அயிரை மீன் வளர்ப்பிற்கு தேவையான குஞ்சுகள், இம்மையம் சார்பில் வினியோகிக்கப்படுகின்றன. அயிரை மீன், ஒரு சுவைமிக்க நன்னீர் மீன் இனம். அவை அதிக ஊட்டச்சத்து நிறைந்தவை. சராசரியாக கிலோ, 2,000 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. எனவே, தற்போது, அயிரை மீன் வளர்க்க, மக்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது.
மீனின் சிறப்பு
அயிரை மீன் சுவை நிறைந்தது. மற்ற மீன்களை விட, வளர்ப்பதற்கு குறைந்த இடம் மற்றும் நீர் போதுமானது. வளர்ப்பிற்கான மேலாண்மை முறை மற்றும் செலவினங்கள் மிகக் குறைவு. மருத்துவ குணங்கள் மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. பனையேறி கெண்டை, விரால் மீன்களை விட, அயிரை மீனில் எட்டு மடங்கு கால்சியம் சத்து அதிகம் உள்ளது. கட்லா, ரோகு, மிர்கால் போன்ற நன்னீர் மீன் இனங்களுக்கு, மாற்று மீன் வளர்ப்பு முறையாக, அயிரை மீன் உள்ளது.
அழிவிற்கான காரணம் என்ன?
அயிரை மீன் இயற்கையாக, ஆறு, குளம், குட்டைகளில் உருவாகக் கூடியது. இவற்றில் நச்சுகள், தொழிற்சாலை கழிவுகள் போன்றவை கலப்பதால், அயிரை மீன் இனப்பெருக்கம், வாழ்விடம் பாதிக்கப்படுகிறது. பருவநிலை மாற்றம், வெப்பநிலை உயர்வு, நீர் நிலைகளில் ஆக்ஸிஜன் அளவு குறைதல், மீன் இனப் பெருக்கம் செய்யும் இடங்கள் சேதமடைதல், போன்ற காரணங்களால், அயிரை மீன் அழிவில் உள்ள மீன் இன பட்டியலில் சேர்ந்துள்ளது.