உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாம்பழ கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை 10 இடங்களில் அமைக்க நடவடிக்கை

மாம்பழ கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை 10 இடங்களில் அமைக்க நடவடிக்கை

சென்னை: கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, வேலுார், திண்டுக்கல், தேனி, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில், 3.60 லட்சம் ஏக்கரில் மாமரங்கள் வளர்க்கப்படுகின்றன. இவற்றில் இருந்து, ஆண்டுதோறும் 6 லட்சம் டன் வரை மாம்பழங்கள் அறுவடை செய்யப்படுகின்றன. நடப்பாண்டு தமிழகத்தில் மாம்பழ விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால், உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். மாமர தோப்புகளில், கிலோ பங்கனபள்ளி, 20 முதல் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னை கோயம்பேடு சந்தையில், கிலோ 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதேபோல, ஜவ்வாரி, ருமானி, நீலம் ஆகிய மாம்பழங்களின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. அதிக விளைச்சல் காரணமாக, விற்பனையாகாத மாம்பழங்கள் அழுகி வீணாகி வருகின்றன.இதுபோன்று அதிக விளைச்சல் இருக்கும் காலங்களில், விவசாயிகளுக்கு வருமானம் அளிக்கும் வகையில், மாம்பழ கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க, வேளாண் வணிகப்பிரிவு நடவடிக்கை எடுத்து வருகிறது.இதுகுறித்து, வேளாண் வணிகப்பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:வேளாண் வணிகப்பிரிவு வாயிலாக தோட்டக்கலை பயிர்கள் வீணாவதை தடுக்க, பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காய்கறிகள், பழங்கள், கீரை வகைகளை பாதுகாக்க பதப்படுத்தும் கூடங்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன.அதன் தொடர்ச்சியாக, நடப்பாண்டு, 10 இடங்களில் மாம்பழ கூழ் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அமைக்கப்பட உள்ளன. விவசாயிகள் மற்றும் தனியார் தொழில் முனைவோர் வாயிலாக அமைக்க திட்டமிடப்பட்டு, அதற்கான இடம் தேர்வு செய்யும் நடவடிக்கை துவங்கி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 08, 2025 08:17

இந்த மாம்பழக் கூழ் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு இதுவரை சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட முறை வெளிவந்துவிட்டது. 70 களில் மதுரையில் லேடி டோக் கல்லூரி அருகில் குடும்பத்தலைவிகளுக்கு இந்த கூழ் தயாரிப்பதை மைய அரசு சார்பில் கற்றுக்கொடுத்தார்கள்.


சமீபத்திய செய்தி