உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 5 கி.மீ.,க்குள் வசிப்பவர்களுக்கு விடுதி ஒதுக்கீடு இல்லை சுற்றறிக்கையால் மாணவர்கள் அதிர்ச்சி

5 கி.மீ.,க்குள் வசிப்பவர்களுக்கு விடுதி ஒதுக்கீடு இல்லை சுற்றறிக்கையால் மாணவர்கள் அதிர்ச்சி

விருதுநகர்:'தமிழகத்தில், வீட்டில் இருந்து 5 கி.மீ.,க்குள் வசிக்கும் பள்ளி, கல்லுாரி மாணவர்களை ஆதிதிராவிடர் விடுதியில் சேர்க்கக் கூடாது' என்ற சுற்றறிக்கையால், அவற்றை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. வீட்டில் இருந்து 5 கி.மீ.,க்குள் வசிக்கும் பள்ளி, கல்லுாரி மாணவர்களை விடுதிகளில் சேர்க்கக்கூடாது என, ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை கீழ் செயல்படும் 56 விடுதிகளில், 35ல் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தொடர்பான பதிவுகளை, ஒரு வாரமாக நல்லோசை செயலியில் பதிவேற்ற முடியவில்லை. இதே நிலை தான் தமிழகம் முழுக்க நிலவுகிறது.மேலும், இந்த 35 விடுதிகளும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இம்மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதுடன் விடுதிகளில் பணிபுரியும் 35 வார்டன்கள், 70 சமையலர்கள், 35 ஏவலர்கள், 35 காவலர்கள் என, 205 ஊழியர்களின் எதிர்காலமும் பாதிக்கப்படும்.இது குறித்து தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் நலத்துறை ஊழியர் சங்க மாநில பொதுச்செயலர் பாண்டியராஜா கூறுகையில், ''மாணவர்கள் எண்ணிக்கை குறைவான விடுதிகள் குறித்து விருதுநகர் கலெக்டர் அளித்த அறிக்கையால், ஆணையர், நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிகிறது. எனவே, மறுபரிசீலனை செய்து, விருதுநகர் மாவட்டத்தில் 56 விடுதிகளும் தடையின்றி செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.விருதுநகர் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் பாலாஜி கூறுகையில், ''5 கி.மீ.,க்குள் வசிக்கும் மாணவர்கள் விடுதிக்கு வந்து சாப்பிட்டு விட்டு, மீண்டும் வீட்டிற்கு சென்று விடுகின்றனர். ''வருகை பதிவை காண்பிக்க முடியவில்லை. ஆய்வின் போது விடுதிகள் காலியாக உள்ளன. அவற்றின் நோக்கமும் வீணாகிறது.''தற்போது குறைவான வருகை பதிவு உள்ள விடுதிகளுக்கு மறுவாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் வருகை பதிவை காட்டினால், அந்த விடுதிகள் மூட வாய்ப்பில்லை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி