புளி பதப்படுத்தும் தொழிலுக்கு மானியம்
சென்னை:“சட்டசபையில், கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதம்: பா.ம.க., - ஜி.கே.மணி: தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில், புளி ஏராளமாக சாகுபடி செய்யப்படுகிறது. அதை பதப்படுத்த, அரசு மானியத்துடன் கடன் உதவி வழங்குமா; இப்பகுதியில் விளையும் புளிக்கு, அரசு புவிசார் குறியீடு பெற்றுத் தருமா?அமைச்சர் அன்பரசன்: பென்னாகரம் தொகுதியில், 445 ஏக்கரில் புளி சாகுபடி செய்யப்பட்டு, 2500 டன் உற்பத்தி செய்யப்படுகிறது. புளி பதப்படுத்தும் தொழில் செய்ய, 10 தொழில் முனைவோருக்கு, 34 லட்சம் ரூபாய் மானியத்துடன், 2.89 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.புளி பதப்படுத்தும் தொழில் செய்ய முன்வரும் தொழில் முனைவோருக்கு, ஐந்து சுய வேலைவாய்ப்பு திட்டங்களின் கீழ், மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படுகிறது. புவிசார் குறியீடு, வேளாண் பொருள்கள், உணவுப் பொருட்கள், விளைபொருட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்திய அளவில், 69 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்று, தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. புவிசார் குறியீடு பெற வழங்கப்படும் மானியத்தை, 25,000 ரூபாயில் இருந்து, 1 லட்சம் ரூபாயாக உயர்த்தி, ஏப்.19ம் தேதி முதல்வர் அறிவித்துள்ளார். புவிசார் குறியீடு பெற, அப்பொருள் குறிப்பிட்ட பகுதியில் இருந்து தோன்றியிருக்க வேண்டும். அதற்கான வரலாற்று சான்று இருக்க வேண்டும்.இவ்வாறு விவாதம் நடந்தது.