உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போரூர் சிறுமி படுகொலை வழக்கு தஷ்வந்தை விடுதலை செய்தது சுப்ரீம் கோர்ட்

போரூர் சிறுமி படுகொலை வழக்கு தஷ்வந்தை விடுதலை செய்தது சுப்ரீம் கோர்ட்

சென்னை போரூரைச் சேர்ந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளி தஷ்வந்தை விடுவித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை போரூருக்கு அருகே உள்ள மதனந்தபுரத்தைச் சேர்ந்தவர் பாபு. அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவரது, 6 வயது மகள் ஹாசினி, கடந்த 2017ல் காணாமல் போனார். போலீசார் விசாரணை நடத்தி, குன்றத்துார் பகுதியைச் சேர்ந்த தஷ்வந்த் என்ற இளைஞரை கைது செய்தனர். இவர், சிறுமி ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொன்றது விசாரணையில் தெரிய வந்தது. தஷ்வந்த் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. பின், ஜாமினில் வெளியே வந்த தஷ்வந்த், அவரது தாயையும் கொலை செய்துவிட்டு தப்பி ஓடினார். போலீசார் தனிப்படை அமைத்து, மஹாராஷ்டிராவின் மும்பையில் தஷ்வந்தை கைது செய்தனர். சிறுமி ஹாசினி கொலை வழக்கை விசாரித்த செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம், தஷ்வந்துக்கு துாக்கு தண்டனை விதித்தது. இதற்கு எதிராக தஷ்வந்த் தொடர்ந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, துாக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் தஷ்வந்த் மனு தாக்கல் செய்தார். உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்து நேற்று தீர்ப்பளித்தது. அதன் விபரம்: இந்த விவகாரத்தில் தஷ்வந்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முறையான ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை. மேலும், 'சிசிடிவி' காட்சிகளில் இருப்பது அவர் தானா என்பதிலும் சந்தேகம் இருக்கின்றன. மரபணு சோதனைகளும் சரியாக ஒத்து போகவில்லை. எனவே, இந்த விவகாரத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்ட தஷ்வந்துக்கு, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் அளித்த துாக்கு தண்டனை ரத்து செய்யப்படுகிறது. குற்றவாளியை உடனடியாக விடுவிக்க உத்தரவிடுகிறோம். இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, 'சென்னையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, தமிழக அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார். - டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை