உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறுவாணி குடிநீருக்கு ரூ.8.90 கோடி கேரளாவுக்கு தருகிறது தமிழகம்

சிறுவாணி குடிநீருக்கு ரூ.8.90 கோடி கேரளாவுக்கு தருகிறது தமிழகம்

சென்னை:சிறுவாணி அணை குடிநீரை பெறுவதற்கு, கேரள மாநில அரசிடம் விரைவில், 8.90 கோடி ரூபாய் கட்டணமாக செலுத்தப்பட உள்ளதாக, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு கூறினார்.சட்டசபையில் நடந்த விவாதம்:அ.தி.மு.க., - வேலுமணி: கோவை மாவட்டத்திற்கு சிறுவாணி அணையில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது. கோவை மாநகராட்சி மக்கள் பயன்பாட்டிற்கு நாள்தோறும், 77 எம்.எல்.டி., குடிநீர் வழங்கப்பட வேண்டும். அதை ஜனவரி மாதம் வரை வழங்கினர். தற்போது, நாள்தோறும் 47 எம்.எல்.டி., மட்டுமே வழங்குகின்றனர். கேரளா அரசால், 30 எம்.எல்.டி., நீர் குறைக்கப்பட்டு உள்ளது. மேலும் அங்குள்ள, 10 ஊராட்சிகள், ஏழு பேரூராட்சிகளுக்கு, 18 எம்.எல்.டி., வழங்க வேண்டிய நிலையில், அது, 12 எம்.எல்.டி.,யாக குறைக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு குடிநீர் வாரியம், 13 கோடி ரூபாயை கட்டாததால், தமிழகத்திற்கு 36 எம்.எல்.டி., நீரை, கேரள அரசு குறைத்துள்ளதாக தகவல். இதனால், மக்கள் மிகவும் பாதிக்கின்றனர். சமீபத்தில், 6 கோடி கோடி ரூபாய் கட்டணம் செலுத்தப்பட்டு உள்ளதாக தெரிகிறது. மீதமுள்ள பணத்தை செலுத்தியோ அல்லது பேச்சு வாயிலாகவோ, இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.அமைச்சர் நேரு: கேரளா சிறுவாணி அணையில், ஒவ்வொரு ஆண்டும் மழை காலத்தில் முழு கொள்ளளவு நீரை தேக்க, அம்மாநில அரசு அனுமதிப்பதில்லை. கேட்டால் ஆழியாறு பிரச்னையை தீர்த்தால் மட்டுமே, முழுமையாக நீரை தேக்க அனுமதி தருவோம் என்கின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூ., தலைவர் வாயிலாக, கேரள முதல்வரிடம் பேசியதால், ஓரளவிற்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. பில்லுார் மற்றும் சிறுவாணி அணைகள் வாயிலாக கோவை நகருக்கு, 380 எம்.எல்.டி., தண்ணீர் வழங்கப்படுகிறது. சிறுவாணி நீரை நகராட்சிகளுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கேரளாவிடம் விரைவில், 8.90 கோடி ரூபாய் கொடுக்க உள்ளோம். பணம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. எனவே, தண்ணீரை பெற்று வழங்குவதில், எந்த பிரச்னையும் இல்லை.இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை