மூன்று ஆண்டிற்கான கலைமாமணி விருதுகள் தமிழக அரசு அறிவிப்பு; அடுத்த மாதம் விழா
சென்னை:திரைப்பட பின்னனி பாடகர், கே.ஜே.யேசுதாஸ் உள்ளிட்டோருக்கு, தமிழக அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு சார்பில், பல்வேறு கலைப் பிரிவுகளை சேர்ந்த சிறந்த கலைஞர்களுக்கு, கலைமாமணி விருது கள் வழங்கப்படு கின்றன. பாரதியார், எம்.எஸ்.சுப்புலட்சுமி, பால சரஸ்வதி பெயர்களில் விருதுகள் வழங்கப்படுகின்றன. சிறந்த கலை நிறுவனத்திற்கு கேடயம், நாடக குழுவிற்கு சுழற்கேடயம் வழங்கப்படுகிறது. அதன்படி, 2021, 2022 மற்றும் 2023ம்ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர் முருகேச பாண்டியனுக்கு, பாரதியார் விருது; திரைப்பட பாடகர் கே.ஜே.யேசுதாசுக்கு, எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது; நாட்டிய கலைஞர் முத்துகண்ணம்மாளுக்கு, பால சரஸ்வதி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. தங்கப் பதக்கம் இவ்விருது பெறுவோருக்கு, ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகையுடன், மூன்று சவரன் தங்கப் பதக்கம் வழங்கப்பட உள்ளது. சிறந்த கலை நிறுவனத்திற்கான விருது, சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் உள்ள, தமிழ் இசை சங்கத்திற்கும், சிறந்த நாடக குழுவிற்கான விருது, மதுரை மாவட்டம், பாலமேடு எம்.ஆர்.முத்துசாமி நினைவு நாடக மன்றத்திற்கும் அறிவிக்கப் பட்டுள்ளது. இவர்களுக்கு கேடயம் மற்றும் சுழற் கேடயத்துடன், தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. 30 பேர் மூன்று ஆண்டுகளுக்கு, தலா 30 பேர் தேர்வு செய்யப்பட்டு, கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. நடிகர் விக்ரம் பிரபு, எஸ்.ஜே.சூர்யா, நடிகை சாய் பல்லவி, இயக்குநர் லிங்குசாமி, இசை அமைப்பாளர் அனிருத், பின்னனி பாடகி ஸ்வேதா மோகன் உள்ளிட்டோரும், கலை மாமணி விருது பெறும் பட்டியலில் இடம் பெற்று உள்ளனர். சென்னை கலைவாணர் அரங்கில், அக்டோபர் மாதம் நடக்கும் விழாவில், முதல்வர் ஸ்டாலின், விருதுகளை வழங்கி கவுரவிக்க உள்ளார்.