உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சுங்கச்சாவடி கட்டண பாக்கி ரூ.276 கோடியை செப்டம்பருக்குள் செலுத்த தமிழக அரசு உறுதி

சுங்கச்சாவடி கட்டண பாக்கி ரூ.276 கோடியை செப்டம்பருக்குள் செலுத்த தமிழக அரசு உறுதி

சென்னை:தென் மாவட்டங்களுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள, நான்கு சுங்கச்சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய சுங்க கட்டணத்தில், 50 சதவீதத்தை வரும் 15க்குள்ளும், மீதியை செப்டம்பரிலும் செலுத்துவது என, போக்குவரத்து துறை செயலர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், மதுரை - கன்னியாகுமரி, கன்னியாகுமரி - எட்டூர்வட்டம், சாலைப்புதுார் - மதுரை, நாங்குநேரி - கன்னியாகுமரி ஆகிய, நான்கு சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பஸ்களை இயக்கியதற்காக, சுங்க கட்டண பாக்கி 276 கோடி ரூபாயை தமிழக அரசு போக்கு வரத்து கழகங்கள் செலுத்த வேண்டும். இந்த நிலுவை தொகையை செலுத்த உத்தரவிடக் கோரி, சுங்கச் சாவடிகளை பராமரிக்கும் நிறுவனங்கள் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நல்ல தீர்வு வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், சுங்கக் கட்டண பாக்கி 276 கோடி ரூபாயை செலுத்தி, பிரச்னைக்கு தீர்வு காண, மாநில போக்குவரத்துத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், நான்கு சுங்க சாவடிகள் வழியாக அரசு பஸ்கள் செல்ல தடை விதித்தது. கடந்த முறை வழக்கு விசாரணையின்போது, 'இந்த பிரச்னைக்கு தீர்வு காண, சுங்கச்சாவடிகளை பராமரிக்கும் நிறுவனங்களுடன், போக்குவரத்து துறை செயலர் பேச்சு நடத்தி வருகிறார். இவ்விவகாரத்தில், விரைவில் நல்ல தீர்வு எட்டப்படும்' என, தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கப்பலுார், எட்டூர்வட்டம், சாலைப்புதுார் மற்றும் நாங்குநேரி ஆகிய, நான்கு சுங்கச்சாவடிகள் வழியாக, அரசு பஸ்களை இயக்க அனுமதிக்கக் கூடாது என, ஜூலை 8ல் பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைத்து, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, சுங்கச்சாவடிகளை நிர்வகிக்கும் நிறுவனங்களுடன் போக்குவரத்து துறை செயலர், ஜூலை 11ல் நடத்திய பேச்சில் எட்டப்பட்ட முடிவுகள் பற்றிய விபரங்களை அறிக்கையாக தாக்கல் செய்தார். அதில், 'பாக்கி சுங்கக் கட்டணத்தில், 50 சதவீதம், வரும் 15ம் தேதிக்குள்ளும், மீதமுள்ள தொகை செப்டம்பர் மாதத்திலும் செலுத்தப்படும் என, கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு உள்ளது. இரண்டு பங்கு சுங்கச்சாவடி அமைந்துள்ள மாவட்டத்தில் இயக்கப்படும் பஸ்களுக்கு 50 சதவீத கட்டணமும், இரு மாவட்டங்களுக்கு இடையில் இயக்கப்படும் பஸ்களுக்கு மூன்றில் இரண்டு பங்கு கட்டணமும் செலுத்தப்படும். அனைத்து அரசு பஸ்களுக்கும், 'பாஸ்டேக்' வாயிலாக, சுங்கக் கட்டணம் செலுத்தப்படும்' என, தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதி, வழக்கு விசாரணையை, வரும் 21ம் தேதிக்கு தள்ளிவைத்தார். அதுவரை, நான்கு சுங்கச்சாவடிகள் வழியாக, அரசு பஸ்களை இயக்க அனுமதிக்கக் கூடாது என்ற உத்தரவை நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி