உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மருத்துவ துறையில் தமிழகம் வழிகாட்டி: அமைச்சர் சுப்பிரமணியன்

மருத்துவ துறையில் தமிழகம் வழிகாட்டி: அமைச்சர் சுப்பிரமணியன்

சென்னை:''மருத்துவத் துறையில் இந்தியாவுக்கே தமிழகம் தான் வழிகாட்டியாக உள்ளது,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில், முதல்வர் காப்பீடு திட்டத்தில், 50க்கும் மேற்பட்டோருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதன் வெற்றியை கொண்டாடும் நிகழ்ச்சி, சென்னை கிண்டியில் நேற்று நடந்தது. இதில், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது: தமிழகத்தில் அப்பல்லோ போன்ற தனியார் மருத்துவமனைகளில், ஏழை எளிய மக்களுக்கு, முதல்வர் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை கிடைத்து வருகிறது. தமிழகத்தில் முதல்வர் காப்பீட்டு திட்டம் துவங்கப்பட்டு, 10 ஆண்டுகளுக்கு பின், தமிழகத்தை பின்பற்றி மத்திய அரசு, தேசிய அளவில் காப்பீட்டு திட்டத்தை கொண்டு வந்தது. தற்போது, 964 அரசு, 1,247 தனியார் மருத்துவமனைகளில், முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழகத்தை பின்பற்றி, இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தையும், மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில், விபத்தில் சிக்கிய 4.30 லட்சம் பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். இதற்காக, 397.68 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் செயல்பாட்டில் உள்ள, மக்களை தேடி மருத்துவ திட்டத்தை, நாடு முழுதும் விரிவுப்படுத்த உள்ளதாக, மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார். அப்பல்லோ மருத்துவ குழும இயக்குநர் சிந்துாரி ரெட்டி பேசுகையில், ''உலகத்தரம் வாய்ந்த சுகாதார பராமரிப்பை, ஒவ்வொரு தனிநபரும் எளிதில் பெற முடியும் என்ற நம்பிக்கையை அப்பல்லோ குழுமம் அளித்து உள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ