சென்னை: மத்திய அரசு அறிவித்துள்ள, நகர்ப்புற சவால் நிதி திட்டத்தில், தமிழகத்துக்கான நிதி பெறுவதற்காக, திட்டங்கள் தயாரிக்கும் பணிகளை, தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை முடுக்கி விட்டுள்ளது.நாடு முழுதும், 'ஸ்மார்ட் சிட்டி, அம்ரூத்' திட்டங்கள் வாயிலாக, நகர்ப்புற பகுதிகளில் உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாட்டு பணிகள் நடைபெறுகின்றன. தமிழகத்தில், 100க்கும் மேற்பட்ட நகரங்களில், இத்திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. பிரதமராக மூன்றாவது முறையாக, மோடி பொறுப்பேற்ற பின், நகர்ப்புற வளர்ச்சிக்காக, 'ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பில், நகர்ப்புற சவால் நிதி உருவாக்கப்படும்' என கடந்த ஆண்டு ஜூலையில், மத்திய அரசு அறிவித்தது. வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், இதற்காக, 10,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நகரங்களை வளர்ச்சி மையங்களாக மாற்றுவது, மறுசீரமைப்பு, குடிநீர் வினியோகம் மற்றும் சுகாதாரம் போன்ற தலைப்புகளில், கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள, இதிலிருந்து நிதி வழங்கப்படும். கடன் பத்திரங்கள்
இதற்கு, தேர்வாகும் திட்டங்களுக்கு, வங்கி மதிப்பீட்டில், 25 சதவீத தொகையை மத்திய அரசு வழங்கும், 50 சதவீத நிதியை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள், நிதி பத்திரங்கள் வாயிலாக திரட்ட வேண்டும். மீதி, 25 சதவீத நிதியை, சம்பந்தப்பட்ட ஊராட்சிகள் அல்லது மாநில அரசு வழங்க வேண்டும். இதுகுறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில், உலக வங்கி உள்ளிட்ட அமைப்புகளிடம் கடன் பெற்று, நகர்ப்புற உள்ளாட்சிகளில், கட்டமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அந்த வகையில், கடன் பத்திரங்கள் வாயிலாக, நிதி திரட்டும் திறன் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு, மத்திய அரசின் இத்திட்டத்தில் நிதி கிடைக்கும். ஆய்வு
இதற்கு தகுதி பெறும் நிலையில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளை, தேர்வு செய்யும் பணிகளை துவக்கி இருக்கிறோம். சென்னை, மதுரை, கோவை மாநகராட்சிகள் இதற்கு தகுதி பெறும் என, தெரிகிறது. பிற மாநகராட்சிகள், நகராட்சிகளின் நிதி நிர்வாக செயல்பாடுகள் குறித்து, ஆய்வு செய்து வருகிறோம். இதன் வாயிலாக நகர்ப்புற சவால் நிதியை பெறுவதற்கான போட்டியில், தமிழகம் ஈடுபடும். இதற்கான திட்டங்கள் தயாரிப்பு போன்ற விஷயங்களில், நகர்ப்புற வளர்ச்சி துறை உதவும். இவ்வாறு அவர் கூறினார்.