மேலும் செய்திகள்
6 மாவட்டங்களில் விரைவில் சூரியசக்தி மின் பூங்கா
01-Oct-2024
சென்னை:தமிழகத்தில் கடந்த செப்டம்பர் நிலவரப்படி, ஒட்டுமொத்த சூரியசக்தி மின் நிலையங்களின் நிறுவுதிறன், 9,270 மெகா வாட்டாக அதிகரித்துள்ளது. நாட்டில் சூரியசக்தி மின் நிறுவு திறனில், தமிழகம் மூன்றாவது இடம் பிடித்துள்ளது. சுற்றுச்சூழலை பாதிக்காத காற்றாலை, சூரியசக்தி மின்சாரத்தை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை பயன்படுத்துமாறு, அனைத்து தரப்பினரையும் மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. பெரிய நிறுவனங்கள் சொந்த பயன்பாடு அல்லது மின்வாரியங்களுக்கு விற்க, அதிக திறனில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்கின்றன. இதுதவிர, கட்டடங்கள் மற்றும் விவசாய நிலங்களில், குறைந்த திறனில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. நாட்டில், செப்., 30ம் தேதி நிலவரப்படி, மாநிலம் வாரியாக உள்ள சூரியசக்தி மின் நிறுவு திறன் விபரத்தை, தற்போது மத்திய புதுப்பிக்கத்தக்க மின்துறை வெளியிட்டுள்ளது. அதில், ராஜஸ்தான் ஒட்டுமொத்தமாக, 24,224 மெகாவாட் சூரியசக்தி மின் நிறுவு திறனுடன் முதலிடத்திலும்; குஜராத், 15,120 மெகாவாட் உடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன. அடுத்து தமிழகம், 9,270 மெகாவாட் உடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. கர்நாடகா, 8,930 மெகா வாட் உடன் நான்காவது இடத்திலும்; மஹாராஷ்டிரா, 7,500 மெகாவாட் உடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன. கடந்த ஜூன் நிலவரப்படி, ராஜஸ்தான் முதலிடம்; குஜராத் இரண்டாமிடம் இருந்த நிலையில், கர்நாடகா, 8,819 மெகா வாட் உடன் மூன்றாவது; தமிழகம், 8,617 மெகா வாட் திறனுடன் நான்காவது இடத்தில் இருந்தன. தற்போது, கர்நாடகாவை பின்னுக்கு தள்ளி, தமிழகம் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
01-Oct-2024