தமிழக கோரிக்கை ஏற்பு 19 லட்சம் டன் அரிசிக்கு ஒப்புதல்
சென்னை:தமிழக கோரிக்கையை ஏற்று, கொள்முதல் செய்த நெல்லை, 16 லட்சம் டன் அரிசியாக மாற்ற அளித்திருந்த அனுமதியை, 19 லட்சம் டன்னாக உயர்த்தி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.மத்திய அரசின் சார்பில், தமிழக விவசாயிகளிடம் இருந்து நுகர்பொருள் வாணிப கழகம் நெல் கொள்முதல் செய்கிறது. இந்த நெல் அரிசியாக மாற்றப்பட்டு, ரேஷனில் வழங்கப்படுகிறது.இதில் செப்., முதல், மார்ச் வரையான கரீப் பருவத்தில், 16 லட்சம் டன் அரிசி கிடைக்கும் வகையில், 24 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய, மத்திய அரசு அனுமதித்தது. அதை விட அதிகமாக, 28 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. அதற்கு ஏற்ப அரிசி அளவை, 19.24 லட்சம் டன்னாக உயர்த்த அனுமதிக்குமாறு, மத்திய உணவு துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷியிடம், டில்லியில் ஜூன் 25ல், அமைச்சர் சக்கரபாணி கோரிக்கை வைத்தார்.பத்து நாட்களில் அரிசி இருப்பை, 19.24 லட்சம் டன்னாக அதிகரித்து, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.இது தவிர, தமிழக அரசின் கோரிக்கை ஏற்று, விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல்லுக்கு, 810 கோடி ரூபாய் வழங்கியதற்காக, மத்திய அரசுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும், நெல் மற்றும் அரிசி உற்பத்தியாளர்கள் சம்மேளன நிர்வாக இயக்குநர் அம்ருதீன் ேஷக் தாவூது நன்றி தெரிவித்துள்ளார்.