உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழ் பல்கலைக்கு ராஜராஜசோழன் பெயர் சூட்ட வேண்டும்:சென்னை ஐகோர்ட் நீதிபதி சுரேஷ்குமார் அரசுக்கு கோரிக்கை

தமிழ் பல்கலைக்கு ராஜராஜசோழன் பெயர் சூட்ட வேண்டும்:சென்னை ஐகோர்ட் நீதிபதி சுரேஷ்குமார் அரசுக்கு கோரிக்கை

தஞ்சாவூர்:உலகபுகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழனின், 1039வது சதய விழா நேற்று பெரியகோவிலில் மங்கள இசை, திருமுறை அரங்கத்துடன் துவங்கியது. விழாவில், சதயவிழா குழு தலைவர் செல்வம் வரவேற்றார். கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார்.விழா துவக்க உரையாற்றிய சென்னை ஐகோர்ட் நீதிபதி சுரேஷ்குமார் பேசியதாவது:தமிழ் மன்னில் பல மன்னர்கள் ஆட்சி புரிந்துள்ளனர். ஆனால், சோழ வம்சத்தில் ஆட்சிபுரிந்த ராஜராஜசோழனை மட்டும் ஏன் பெருமன்னன் என அழைக்கிறோம். ராஜராஜசோழன், முன்னோர்களை காட்டிலும் சிறந்த ஆட்சி நிர்வாகத்தை நடத்தியுள்ளார். தஞ்சாவூரை சுற்றிலும் மக்கள் வாழ முக்கிய தேவையான உணவு உற்பத்தியை தொடங்கி, அதைப் பெருக்கினார்.ராஜராஜசோழன் காலத்தில் விவசாயம் செழித்தோங்கியது. விவசாயம் நன்றாக இருந்தாலும், தன் நாட்டில் உள்ள மக்கள் அமைதியாக வாழ வேண்டும்; அருகில் உள்ள அரசர்களின் படையெடுப்புகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தெற்கே குமரியில் தொடங்கி, வடக்கே துங்கபத்திரா நதி வரையுள்ள அரசர்கள் மீது போர் தொடுத்து, தன் ஆட்சியின் கீழ் பல பகுதிகளையும் ராஜராஜன் கொண்டு வந்தார்.தன் ஆட்சி எல்லையை விரிவுபடுத்திய பின்னர், ராஜராஜசோழன் சமயத்தையும், தமிழையும் வளர்க்கும் பணியில் ஈடுபடத் தொடங்கினார். அப்போது, பல்லவர்கள் காலத்தில் காஞ்சியில் கட்டிய சில கோவில்களை பார்த்துவிட்டு, அதை விட நாம் சிறந்த கோவிலை கட்ட வேண்டும் எனக்கருதி, 1006-ம் ஆண்டு கட்டத் தொடங்கி, 1010ம் ஆண்டு முடித்தது தான் இந்த தஞ்சாவூர் பெரிய கோவில். இதுபோன்று இறைவனுக்கு மிக பிரமாண்டமான கோவில்களை அமைத்தவர்கள் தான் தமிழ் மன்னர்கள். அதைத்தாண்டி தன் காதலிக்கு கட்டடம் கட்டியவர்கள் எல்லாம் மன்னர்கள் அல்ல; அப்படிபட்ட மன்னர்கள் தமிழ் மண்ணில் இல்லை.ராஜராஜசோழனின் புகழ் இந்த உலகம் அழியும் வரை நிலைத்து நிற்கும். அப்படிப்பட்ட ராஜராஜன் என்ற பெரு மன்னனுக்கு, தமிழக அரசு இன்று அரசு விழா நடத்துவதுடன், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கு ராஜராஜன் தஞ்சை தமிழ் பல்கலை கழகம் என தமிழக அரசு பெயர் சூட்ட வேண்டும். இது ராஜராஜசோழனுக்கு செய்யும் சிறப்பாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

கெட்ட சகுனம் குறித்தே அச்சப்படுகின்றனர்: விழாவில் 'மாஜி' எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு

சதய விழா துவக்க அரங்கில் ஆயிரக்கணக்கான நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. ஆனால், கூட்டம் இல்லாமல் நாற்காலிகள் காலியாக கிடந்தது. இதையடுத்து, விழாவில் பேசிய ஒரத்தநாடு தொகுதி தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் பேசியதாவது:சதய விழா அழைப்பிதழில் நான்கு முதல் ஐந்து பக்கங்களில் பலருடைய பெயர்கள் போடப்பட்டு உள்ளன. உறுப்பினர்கள் என்ற முறையில் அவர்களின் பெயர் அழைப்பிதழில் இருப்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை. அவர்கள் அனைவரும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் வந்திருந்தால் அரங்கம் நிறைந்திருக்கும்; நாற்காலிகள் காலியாக இருந்திருக்காது. ராஜராஜசோழனின் சதயவிழாவை பெருமையாக பேசுவது மட்டும் போதாது. தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு அரசியல்வாதிகள் எல்லாரும் வர மாட்டார்கள். காரணம், இங்கு வந்து சென்றால், உடல் நிலை சரியில்லாமல் போய்விடும்; பதவி பறிபோய் விடும் என்ற தவறான அச்சம் உள்ளது. அரசியல் என்பது சேவை செய்வது. இந்த சேவையை யார் சரியாக செய்கின்றனரோ, அவர்கள் மட்டும் தான் தஞ்சை பெரியகோவிலுக்குள் வர முடியும். தவறு செய்திருந்தால் ராஜராஜன் கொன்று விடுவார். துணை ஜனாதிபதியாக இருந்த சங்கர் தயாள் சர்மா, பெரிய கோவிலுக்கு வந்து சென்ற பின்தான் ஜனாதிபதியானார். அதை நினைவில் கொள்ள வேண்டும். இப்படி தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்து சென்றவர்கள் பலருக்கும் நிறைய நன்மைகள் நடந்திருக்கின்றன. ஆனால், நன்மைகள் நடந்தது குறித்து யாரும் பேசுவதில்லை. கெட்ட சகுனத்தை நினைத்தே அச்சப்படுகின்றனர். அது தேவையில்லாதது. இறை வழிபாடு இருந்தால் கட்டாயம் நிம்மதி கிடைக்கும்.இவ்வாறு அவர் பேசினார். ஆளுங்கட்சி வட்டாரத்தில், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் உட்பட வி.ஐ.பி.,க்கள் யாரும் சதய விழாவில் பங்கேற்காத நிலையில், அவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை