உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் பரவலாக பெய்தது மழை; இன்றும் 13 மாவட்டங்களில் பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் பரவலாக பெய்தது மழை; இன்றும் 13 மாவட்டங்களில் பெய்ய வாய்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை; தமிழகத்தில் இரவு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பெய்த இடைவிடாத மழை, விவசாயிகள், மக்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில வாரங்களாக அக்னி நட்சத்திரத்துக்கு இணையாக வெயில் கொளுத்தி தள்ள, பொதுமக்கள் வெப்பத்தால் தவித்து போயினர். பருவநிலையின் திடீர் மாற்றம் மக்களை பாதித்த நிலையில், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் நேற்று மாலை முதல் தொடங்கிய மழை, இரவு முழுவதும் பல மாவட்டங்களில் தொடர்ந்தது.தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் 2 மணிநேரத்துக்கும் அதிகமாக கொட்டித் தீர்த்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கோவையில் இரவில் பல்வேறு பகுதிகளில் விட்டு, விட்டு மழை பெய்தது. மதுரையில் சூறைகாற்றுடன் பெய்த கனமழையால் ஆங்காங்கே மரங்கள் சாலைகளில் சாய்ந்து விழுந்தன. கோரிப்பாளையம், முனிச்சாலை என பல இடங்களில் மழை கொட்ட, சாலைகளில் போக்குவரத்து சிறிதுநேரம் பாதிக்கப்பட்டது.ஈரோட்டின் பல பகுதிகளில் ஒரு மணிநேரத்துக்கும் அதிகமாக மழை பெய்தது. அதன் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓட வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பலமான மழை பெய்தது.திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, திருவாரூர் மாவட்டத்தில் சில பகுதிகளிலும் மழை பதிவானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளிலும் 3வது நாளாக மழை கொட்டியது. திருச்சி மாவட்டம் பி.மேட்டூர், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு, பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளிலும் இடைவிடாது மழை பெய்தது. கரூர், சேலம், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலும் பரவலாக மழை கொட்டியது. இரவு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழை, இன்றும் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. திருவாரூர், நாகை, சேலம், நீலகிரி, ஈரோடு, கடலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை விபரம்: (மில்லி மீட்டரில்) ஜெயங்கொண்டம்- 88,சுத்தமல்லி அணை -61,அரியலூர் -60,ஈரோடு- 49,எலந்த குட்டைமேடு- 35,சூளாங்குறிச்சி -109,கடையநல்லூர்- 95,மணிமுத்தாறு அணை- 76,தியாகதுருகம்- 60,கள்ளக்குறிச்சி- 38,உளுந்தூர்பேட்டை- 34,குருந்தன்கோடு -32,முள்ளங்கி விளை- 28,திற்பரப்பு -28,பஞ்சப்பட்டி- 46,க.பரமத்தி- 41,கடவூர்- 38,கரூர்- 28,மைலம்பட்டி- 26,ஜம்பு குட்டப்பட்டி- 93,நெடுங்கல்- 54,கே.ஆர்.பி. அணை- 33,கிருஷ்ணகிரி- 28,ராயக்கோட்டை- 27,சேந்தமங்கலம்- 97,நாமக்கல்- 88,திருச்செங்கோடு- 74,பரமத்திவேலூர்- 65,எருமப்பட்டி- 40,மோகனூர்- 31,பெரம்பலூர்- 22,கரிய கோவில் அணை -70,கெங்கவல்லி- 63,டேனிஷ் பேட்டை -45,ஆத்தூர் சேலம்- 41,வீரகனூர்- 40,ஏற்காடு- 29,திருப்பூர்- 31,முண்டியம்பாக்கம்-62,விழுப்புரம்- 59,சூரப்பட்டு- 48,வளவனூர் -45,மரக்காணம்- 36,மத்தூர் கடலூர்- 135,ஆவுடையார் கோவில்- 120,தங்கச்சி மடம்- 117.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ