உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 5 லட்சம் மாணவர்கள் இலக்கு; இதுவரை 1.50 லட்சமே சேர்ப்பு

5 லட்சம் மாணவர்கள் இலக்கு; இதுவரை 1.50 லட்சமே சேர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'அரசு தொடக்கப் பள்ளிகளில், 2025 - -26ம் கல்வியாண்டில், ஐந்து லட்சம் மாணவர்கள் சேர்க்கை என்ற இலக்கை எட்ட, ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தொடக்க கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது.அரசு தொடக்கப் பள்ளிகளில் கடந்த வாரம் தேர்வுகள் முடிந்தன. தற்போது, கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. ஜூன் மாதம் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் முன், 2025 - 26ம் கல்வியாண்டுக்காக, ஐந்து லட்சம் மாணவர்களை பள்ளியில் சேர்க்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதை செயல்படுத்த, ஆசிரியர்கள் விடுப்பு எடுக்காமல் பணியாற்ற உத்தரவிடப் பட்டுள்ளது. இதுவரை, 1.5 லட்சம் மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். அதனால், இலக்கை அடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, மாணவர் சேர்க்கையை விரைவுபடுத்தும்படி, தொடக்க கல்வித்துறை இணை இயக்குநர், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு நேற்று சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:வரும் 2025 - 26ம் கல்வியாண்டிற்கு மாணவர் சேர்க்கை நடக்கும் நிலையில், கடந்த மூன்று நாட்களில், மாணவர் சேர்க்கை புள்ளி விபரம் மிகவும் குறைந்துள்ளது. நாம் நிர்ணயித்துள்ள இலக்கை அடையும் வகையில், அனைத்து அரசு, அரசு உதவி பெறும், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும். பள்ளி அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு சென்று, 5 வயது நிரம்பிய குழந்தைகள் உள்ள பெற்றோரிடம், அரசின் நலத்திட்டங்களை விளக்கி, அதே இடத்தில், 'ஸ்பாட் அட்மிஷன்' அடிப்படையில், மாணவர்களை பள்ளியில் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். இது குறித்து, வட்டார கல்வி அலுவலர்கள் வழியே அறிவுறுத்த வேண்டும். மாணவர் சேர்க்கை விபரங்களை, உடனே தொடக்க கல்வித் துறையால் அனுப்பப்பட்ட, 'கூகுள் பார்ம்'மில் பதிவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Senthil
ஏப் 29, 2025 13:41

அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 70 ஆயிரம், 80 ஆயிரம், 1 லட்சம் என தங்கள் தகுதியை மீறி சம்பளம் வாங்குகிறார்கள் ஆனால் அவர்களின் பயன் என்பது கிட்டத்தட்ட 0. அதே வேளையில் 5 ஆயிரம், 10 ஆயிரம் என மிகக் குறைந்த சம்பளம் வாங்கும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் முழு உழைப்பையும் போட வேண்டிய சூழ்நிலை நிலவுவதால், தனியார் பள்ளியில் படிப்பவர்களில் 90 சதவிகிதம் மாணவர்கள் தங்கள் வாழ்வில் உருப்படுகிறார்கள். TCS, INFY, WIPRO போன்ற IT கம்பெனிகளில் எத்தனை பேர் அரசு பள்ளியில் படித்தவர்கள் என்ற கணக்கைப் டார்த்தாலே அரசு பள்ளிகளின் லட்சனம் தெரிந்துவிடும். இதற்கு ஒரே தீர்வு - அரசு பள்ளிகள் அனைத்தையும் தனியாரிடம் ஒப்படைத்துவிட்டு, ஏழை மாணவர்களுக்கான அனைத்து கட்டணத்தையும் அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அரசுப்பள்ளி, அரசு மருத்துவமனை என்றாலே அழுக்கு என்ற கேவலமான நிலை ஒழியும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை