பாரபட்சமின்றி மதுபானங்கள் கொள்முதல் செய்கிறது டாஸ்மாக் ஈ.டி., ரெய்டுக்கு பின் மாற்றம்
சென்னை:தமிழக அரசின், 'டாஸ்மாக்' நிறுவனம், சில்லரை கடைகள் வாயிலாக, பீர் மற்றும் மது வகைகளை விற்கிறது. தினமும் சராசரியாக, 150 கோடி ரூபாய்க்கும், வார மற்றும் விசேஷ விடுமுறை நாட்களில், அதை விட அதிகமாகவும், மதுபானங்கள் விற்பனையாகின்றன. இந்நிறுவனம், ஏழு நிறுவனங்களிடம் இருந்து பீர் வகைகளையும், 11 நிறுவனங்களிடம் இருந்து மது வகைகளையும் கொள்முதல் செய்கிறது. மாதம் சராசரியாக, 20 லட்சம் பெட்டி பீர், 50 லட்சம் பெட்டி மது வகைகள் விற்கப்படுகின்றன. அதற்கு ஏற்ப, அவை மதுபான ஆலைகளில் இருந்து கொள்முதல் செய்யப்படுகின்றன. மொத்த மதுபானங்கள் கொள்முதலில், தி.மு.க., ஆதரவாளர்களின், நான்கு நிறுவனங்களிடம் இருந்து, 40 - 50 சதவீதம், மற்ற நிறுவனங்களிடம் இருந்து குறைவாக கொள்முதல் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. சென்னை எழும்பூரில் உள்ள, டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் தி.மு.க., ஆதரவாளர்களின் மதுபான ஆலைகளில், கடந்த மார்ச்சில், அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். டாஸ்மாக் அலுவலகத்தில் முறைகேடு செய்ததற்கு ஆவணங்கள் கிடைத்து இருப்பதாகவும், ஆலைகளில், 1,000 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்திருப்பதாகவும் அமலாக்கத் துறை குற்றம் சுமத்தியது. தற்போது, மதுக்கடைகளில், எந்த நிறுவனத்தின் மதுவகைகள் அதிகம் விற்பனையாகிறதோ, அதற்கேற்ப பாரபட்சமின்றி, அனைத்து நிறுவனங்களிடம் இருந்தும், மதுவகைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன என, டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.