தற்காலிக பணியாளர்கள் நியமிக்கிறது ‘டாஸ்மாக்’
சென்னை: ‘டாஸ்மாக்’ நடத்தும் மதுக் கடைகளுக்கு தற்காலிக பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், கடைகள் வாயிலாக மதுபான வகைகளை விற்கிறது. இம்மாதம், 1ம் தேதி முதல் மது பாட்டிலின் அதிகபட்ச சில்லறை விலையுடன், காலி பாட்டிலுக்கான, 10 ரூபாய் சேர்த்து வசூலிக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. ‘குடி’மகன்கள் காலி பாட்டிலை கடைகளில் வழங்கியதும், 10 ரூபாய் திரும்ப வழங்கப்படும். காலி பாட்டில் திரும்ப பெறுவதை கைவிட வலியுறுத்தி, இம்மாதம் 1, 2ம் தேதிகளில் மது கடைகளை திறக்காமல், ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால், 1,729 பேர் மீது நடவடிக்கை எடுக்க, ‘நோட்டீஸ்’ வழங்கியதுடன், 245 பேர் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டனர். அதனால், புதிதாக தற்காலிக பணியாளர்களை நியமிக்கும் நடவடிக்கைகளில் டாஸ்மாக் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக உள்துறை செயலருக்கு, டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் – ஏ.ஐ.டி.யு.சி., தலைவர் பெரியசாமி அனுப்பிய கடிதம்: புதிய நடைமுறையை அமலாக்க தேவையான தொழில்நுட்ப கருவிகள் வழங்காமல், கடைகளின் அடிப்படை கட்டமைப்புகளில் சீர்திருத்தம் என, எவ்வித முன் ஏற்பாடுகளையும் செய்யாமல், டாஸ்மாக்கின் இயந்திரத்தனமான நடவடிக்கை, பணியாளர்களை ஆத்திரமூட்டி, தன்னெழுச்சி போராட்டத்திற்கு தள்ளியுள்ளது. தற்போது, தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீதான நடவடிக்கைகளை நிலுவையில் வைத்து கொண்டு, புதிய தற்காலிக பணியாளர்களை நியமனம் செய்யும் முயற்சியில் டாஸ்மாக் ஈடுபடுவது, நேர்மையான வழிமுறை அல்ல; இது, எதிர்மறை விளைவுகளை உருவாக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.