உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 318 போலி பட்டியல் வணிகர்களின் ரூ.951 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு

318 போலி பட்டியல் வணிகர்களின் ரூ.951 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு

சென்னை: 'திடீர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதில், 318 போலி பட்டியல் வணிகர்கள், 951 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது; இருவர் கைது செய்து, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்' என, தமிழக அரசின் வணிக வரித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, வணிக வரித்துறை ஆணையர் செய்திக்குறிப்பு:இணை ஆணையர்கள் ஆய்வுக் கூட்டத்தில், நியாயமாக வணிகம் செய்யும் வணிகர்களின் நலனை கருத்தில் கொண்டு, போலி பட்டியல் வணிகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு, வணிக வரித் துறை அமைச்சர் மூர்த்தி அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, 2024 மார்ச் 14 மற்றும் ஜூலை 2 ஆகிய தேதிகளில், வணிக வரி ஆணையரின் உத்தரவுப்படி, முதல் மற்றும் இரண்டாவது மாநில அளவிலான திடீர் ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.இம்மாதம், 12ம் தேதி மூன்றாவது முறையாக மாநிலம் முழுதும் வணிக வரித் துறை நுண்ணறிவு பிரிவு வாயிலாக, சீரிய முறையில் திட்டமிடப்பட்ட திடீர் ஆய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில், 318 போலி பட்டியல் வணிகர்கள், 951.27 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.குறிப்பாக, திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கி வரும், 'மெட்ரோ என்டர்பிரைசஸ்' என்ற வணிக நிறுவனத்தை, சென்னை நுண்ணறிவு கோட்ட பிரிவினர் ஆய்வு செய்து, 12.46 கோடி ரூபாய் உள்ளீட்டு வரி போலியாக பதிவு செய்து, அரசுக்கு வரி இழப்பு ஏற்படுத்தியதை கண்டறிந்தனர். அதன் உரிமையாளர்கள் ஜெயபிரகாஷ், பஷீர் அகமது ஆகியோர், 21ம் தேதி கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. போலி வணிக பட்டியல் என்றால் என்ன?ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தின் கீழ், சேவை சார்ந்து ஆண்டுக்கு, 20 லட்சம் ரூபாய்; சரக்குகள் சார்ந்து, 40 லட்சம் ரூபாய்க்கு மேல் வியாபாரம் செய்வோர் கட்டாயம் ஜி.எஸ்.டி., பதிவு சான்று பெற வேண்டும். இதை பெற, 'ஆதார், பான்' எண்கள், தொழில் செய்யும் இடத்திற்குரிய ஆவணங்களுடன், ஜி.எஸ்.டி., இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில், பதிவு சான்று வழங்கப்படும். சிலர், போலி நிறுவனம் துவக்கி, போலியாக வணிகம் செய்யவும் ஜி.எஸ்.டி., சான்று வாங்குகின்றனர். இதற்கு, அறியாமையில் உள்ள மக்களிடம் நுாதன முறையில், 'ஆதார், பான்' எண் வாங்கி, அதை பயன்படுத்தி, அவர்களின் பெயரில் ஜி.எஸ்.டி., பதிவு செய்து, நிறுவனத்தை துவக்குகின்றனர். இதன் வாயிலாக, போலி வணிக பட்டியல்களை வழங்குகின்றனர். போலி வணிக பட்டியல் என்பது, சரக்குகள் வழங்கப்படாமல், நெருங்கிய குழுவிற்குள் விற்பனை செய்தது போல், விலை பட்டியல் மட்டும் வழங்கி, செயற்கையான வர்த்தக பரிவர்த்தனையை உருவாக்கும் மோசடி நடவடிக்கை. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், வரி இல்லாமல் குறைந்த விலைக்கு பொருட்களை வாங்குவதால், நேர்மையாக வரி செலுத்தும் நிறுவனங்களும் பாதிக்கப்படுகின்றன.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kalyanaraman
மார் 23, 2025 07:58

காலங்காலமாக பில் கொடுக்காம MRP யை விட அதிக விலைக்கு விற்கும், டூப்ளிகேட் சாராயத்தை விற்கும் டாஸ்மாகில் இவர்கள் சோதனை செய்ய மாட்டார்களா?


GMM
மார் 23, 2025 07:29

GST - வரி ஏய்ப்பு தொடர்பான விவரங்களை தமிழக மாநில வணிக வரி துறை மத்திய ஆணையருக்கு தகவல் கொடுக்க வேண்டும். நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியாது. தமிழகம் 318 போலி வணிகர்கள் மீது நேரடியாக நடவடிக்கை எடுக்க எந்த அதிகாரம் உள்ளது? திமுக அதிகாரம் மாநில பதிவு நிறுவனங்கள் மீது மட்டும் தான் பயன்படுத்த முடியும்.?


GMM
மார் 23, 2025 07:21

318 போலி பட்டியல். போலி வர்த்தகம். ஜி எஸ். டி .யில் மோசடி. இதன் மீது தமிழக அதிகாரிகள் நேரடியாக எந்த சட்ட பிரிவின் கீழ் நடவடிக்கை edutana


Kasimani Baskaran
மார் 23, 2025 06:16

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தினால் இன்னும் அதிக ஏமாற்று பேர்வழிகளை அடையாளம் காணலாம்.


முக்கிய வீடியோ