உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணா பல்கலைக்கு தற்காலிக துணை வேந்தர்; கவர்னருக்கு ஆசிரியர் சங்கம் கடிதம்

அண்ணா பல்கலைக்கு தற்காலிக துணை வேந்தர்; கவர்னருக்கு ஆசிரியர் சங்கம் கடிதம்

சென்னை : 'அண்ணா பல்கலைக்கு துணை வேந்தரை நியமிக்கும் வரை, ஒரு மூத்த பேராசிரியரை தற்காலிக துணை வேந்தராக நியமிக்க வேண்டும்' என, கவர்னருக்கு பல்கலையின் ஆசிரியர் சங்கத்தினர் கடிதம் எழுதி உள்ளனர்.சங்கத்தின் தலைவர் அருள் அறம் எழுதியுள்ள கடிதம்:உலக புகழ்பெற்ற அண்ணா பல்கலையின் கிண்டி வளாகத்தில், கடந்த 23ம் தேதி, மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை மிகவும் சோகமானது. இந்த சம்பவத்தால், தனிமனித சுதந்திரமும், கண்ணியமும் மீறப்பட்டுள்ளதுடன், பல்கலையின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட மாணவி, போலீசில் புகார் அளித்துள்ளார். அவரின் தைரியத்தை பாராட்டுவதுடன், அவருக்கு நீதி கிடைக்க பல்கலை ஆசிரியர் சங்கம் முழு ஆதரவு அளிக்கிறது. இதுபோன்ற குற்றங்கள் நடக்க, பல்வேறு சூழல்கள் சாதகமாக உள்ளன. முக்கியமாக, பல்கலை வளாகத்தில் உள்ள தேவையற்ற தாவரங்கள் சுத்தம் செய்யப்படாமல் உள்ளன. நிதி பற்றாக்குறையால் கட்டுமான பணிகள் சுணக்கமாக நடக்கின்றன. அத்துடன், வளாகத்தில் பல இடங்களில் கட்டுமான பொருட்களும், கழிவுகளும் குவிந்துள்ளன. வளாகத்தில் சூரிய சக்தியில் இயங்கும் மின் விளக்குகள் உள்ளிட்ட அனைத்து விளக்குகளும் இரவில் எரிவதில்லை. வளாகத்தில் உள்ள அனைத்து, 'சிசிடிவி கேமரா'க்களின் இயக்கம் உறுதி செய்யப்படவில்லை. பல வாயில்களின் வழியாக நுழைவதை தடை செய்து, வளாகத்துக்குள், 24 மணி நேரமும் பாதுகாவலர்கள் ரோந்து சென்றால், வெளியாட்கள் உள்ளே நுழைவதை தடுக்க முடியும். மேலும், வளாகத்துக்குள் நடைப்பயிற்சி செய்வோருக்கு கட்டணம் விதித்து, முறைப்படுத்த வேண்டும். கடந்த மாதம், பல்கலை வளாகத்தில் வாகன விபத்து நடந்தபோது, பெண்களுக்கு எதிராக கடந்த காலங்களில் நடந்த குற்றங்களை பற்றி நிர்வாகத்துக்கு தெரிவித்தோம். பல்கலைக்கு துணை வேந்தர் நியமிக்கப்படாததே, இதுபோன்ற குற்றங்கள் தடுக்கப்படாததற்கு காரணமாக அமைகிறது. இவற்றை சீர்படுத்தும் வகையில், உடனடியாக துணை வேந்தரை நியமிக்க வேண்டும். அதுவரை, பல்கலையில் உள்ள மூத்த பேராசிரியர் ஒருவரை துணை வேந்தர் பொறுப்பில் நியமிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை