பல்கலை சட்ட திருத்தத்திற்கு ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு
சென்னை: தமிழக தனியார் பல்கலை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதற்கு, பல்கலை ஆசிரியர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து, பல்கலை ஆசிரியர் சங்க பொதுச்செயலர் ராஜா வெளியிட்டுள்ள அறிக்கை: ஏழைகள், பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் உயர்கல்விக்காக, அரசு உதவிபெறும் கல்லுாரிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. தற்போது, தமிழக அரசு, தனியார் பல்கலை சட்டத்தை திருத்தி உள்ளது, உதவிபெறும் கல்லுாரிகளை, தனியார் நிறுவனங்களாக்கும் முயற்சியாக உள்ளது. தற்போதைய இந்த சட்ட திருத்தத்தால், தகுதி இருந்தும், வசதி இல்லாத மாணவர்களுக்கான வாய்ப்பு மறுக்கப்படும். ஆயிரக்கணக்கான ஆசிரியர், ஆசிரியரல்லாத ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்படும். யு.ஜி.சி., மத்திய மனிதவளத்துறை, தமிழக அரசு உதவிகள் கிடைக்காது. எனவே, இந்த சட்ட திருத்தத்தை அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.