தஞ்சை கோவில் பாதுகாப்புக்கு முன்னுரிமை
தஞ்சாவூர்:மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், தஞ்சாவூர் அரண்மனையில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளை நேற்று பார்வையிட்டார். தொடர்ந்து, தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். கோவில் கல்வெட்டுகள், ஓவியங்கள், சிற்பங்களை பார்வையிட்டார். மத்திய கலாசாரத்துறை சார்பில், தஞ்சாவூர் பெரிய கோவிலின் கட்டுமான முறைகள், பெரிய கோவிலின் புகழ் ஆகியவற்றை எழுத்தாளர் அமீஷ் திரிபாதியும், அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தும் கலந்துரையாடி, வீடியோ பதிவு செய்தனர். கோவிலுக்கு வந்த சுற்றுலா பயணியரிடமும், அமைச்சர் கலந்துரையாடி குரூப் போட்டோ எடுத்துக் கொண்டார். பெரிய கோவிலுக்கு வந்த மத்திய அமைச்சரை, இந்திய தொல்லியல் துறையின் திருச்சி மண்டல கண்காணிப்பு அலுவலர் சுதானந்தகுமார் கான், முதுநிலை பராமரிப்பு அலுவலர்கள் சங்கர், ராஜா ஆகியோர் வரவேற்றனர். அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறுகையில், ''தஞ்சாவூர் அரண்மனை, வரலாற்று பாரம்பரியத்தின் பெரும் பொக்கிஷம். தஞ்சாவூர் பெரிய கோவில், உலக பாரம்பரிய நினைவு சின்னமாக போற்றப்படுகிறது. இதை பாதுகாப்பாக வைத்திருக்க மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது,'' என்றார்.