காசர்கோடு: கேரளாவில் வங்கிக் கடனால் வீட்டை இழந்து நிர்க்கதியாக நின்ற 70 வயது மூதாட்டிக்கு, அதனை ஒரே இரவில் மீட்டுக் கொடுத்து கேரளாவைச் சேர்ந்த வெளிநாடுவாழ் தொழிலதிபர் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். 70 வயதான ஜானகி, தனது மகன் விஜேஷ், மருமகள் விஜினா மற்றும் இரு பேத்திகளுடன் காசர்கோட்டில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். ஜானகியின் மகன் விஜேஷ், கடந்த 2013ம் ஆண்டு கேரள வங்கியில் ரூ.2 லட்சம் விவசாய கடன் பெற்றுள்ளார். அதன் பிறகு, இரு ஆண்டுகளுக்கு பிறகு, தென்னை மரத்தில் இருந்து கீழே விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால், படுக்கை படுக்கையான அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. போதிய நிதி இல்லாமல் தவித்து வந்த அவரது குடும்பத்தினருக்கு, உறவினர்கள் நிதி திரட்டி கொடுத்து அறுவை சிகிச்சை செய்தனர். சிகிச்சைக்குப் பிறகு அவரால் வழக்கம் போல பணிகளில் ஈடுபட முடியவில்லை.இதனால், வங்கிக் கடனை அடைக்க முடியாத நிலை ஏற்பட்டது. வட்டி அதிகரித்து வங்கிக் கடன் ரூ.6.5 லட்சமாக உயர்ந்தது. ஆனால், ரூ.2.85 லட்சத்தை ஒருமுறை செலுத்தினால் போதும் என்று வங்கி சலுகை அறிவித்தது. இருப்பினும், ஏழ்மையின் காரணமாக அதனை செலுத்த முடியாமல் தவித்து வந்தார். இதனிடையே, நேற்று முன்தினம் ஜானகியை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்று விட்டு, திரும்பி வந்தபோது வீட்டுப் பொருட்கள் அனைத்தும் வெளியில் வைக்கப்பட்டிருந்தன. வீடு சீல் வைக்கப்பட்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.இதனால், இரண்டு சின்னஞ்சிறு குழந்தைகளுடன் நேற்றிரவு அவர்கள் வீட்டுக்கு வெளியே தூங்கும் நிலை ஏற்பட்டது. இது தொடர்பாக ஊடகங்கள் மற்றும் சமூக வலை தளங்களில் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், வங்கிக் கடனான ரூ.1,92,850-ஐ செலுத்தி, மூதாட்டி ஜானகியின் வீட்டை கேரளாவைச் சேர்ந்த வெளிநாடுவாழ் தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் நாயர் மீட்டுக் கொடுத்திருக்கும் நிகழ்வு அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. இது குறித்து ஜானகியின் மகன் விஜேஷ் கூறுகையில், 'ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறோம். நேற்றிரவு வீட்டுக்கு வெளியே தான் தூங்கினோம். எங்களுக்கு உதவ யாரும் இல்லை என்று இருந்தோம். ஆனால், மீடியாக்கள் எங்களை காப்பாற்றி விட்டன. மக்களுக்கான பிரச்னைகளை பேசுவதுதான் பத்திரிகை என்று உணர்ந்துள்ளோம்,' என்று கூறினார். ஐக்கிய அரபு நாட்டில் பல துறைகளில் முன்னணி தொழில் நிறுவனமாக திகழ்ந்து வரும் மன்னத் குழுமத்தின் தலைவரும், நிறுவனருமாக இருப்பவர் உன்னிகிருஷ்ணன். இவர் செய்திகளின் மூலம் இந்த தகவலை அறிந்து, ஜானகிக்கு உதவி செய்துள்ளார். இது தொடர்பாக வங்கி அதிகாரிகளுடன் தொலைபேசியில் பேசி, வங்கி கணக்கிற்கு நேரடியாக தொகையை அனுப்பி கடனை அடைத்துள்ளார். 'சர்வதேச மகிழ்ச்சி' தினத்தையொட்டி இந்த செயலை செய்ததாக உன்னிகிருஷ்ணன் கூறினார். இதனிடையே, வங்கி கடன்களுக்கு வீடுகளை ஜப்தி செய்யக் கூடாது என்று மாநில அரசு உத்தரவிட்ட நிலையிலும், கேரள வங்கியின் இந்த செயல் தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.