உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திண்ணக்குளம் திருநெற்குன்றநாதர் கோவிலை 300 ஆண்டுகளுக்கு மேல் பராமரித்த சோழர்கள்

திண்ணக்குளம் திருநெற்குன்றநாதர் கோவிலை 300 ஆண்டுகளுக்கு மேல் பராமரித்த சோழர்கள்

சென்னை : திருச்சி மாவட்டம், திண்ணக்குளம் கிராமத்தில் உள்ள திருநெற்குன்றநாதர் கோவிலை, முற்கால சோழர்கள் துவங்கி, பிற்கால சோழர்கள் வரை, 300 ஆண்டுகளுக்கும் மேல் சிறப்பாக பராமரிக்கப்பட்ட தகவல், கல்வெட்டுகளின் வாயிலாக தெரியவந்துள்ளது.திருச்சி மாவட்டம், லால்குடி ஒன்றியம், விரகாலுார் அருகில் உள்ள திண்ணக்குளம் கிராமத்தில், திருநெற்குன்றநாதர் கோவில் உள்ளது.

27 கல்வெட்டுகள்

அங்குள்ள கல்வெட்டுகளை, மத்திய தொல்லியல் துறையின் கல்வெட்டு ஆய்வாளர் வீரமணிகண்டன், திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லுாரி உதவிப்பேராசிரியர் சுமிதா ஆகியோர் கண்டறிந்தனர். மத்திய தொல்லியல் துறையின் மைப்படியாளர்கள் அழகேசன், காத்தவராயன் ஆகியோருடன் இணைந்து, அவற்றை படியெடுத்தனர்.இதுகுறித்து, வீரமணிகண்டன் கூறியதாவது:இந்த கோவிலில் சில கல்வெட்டுகளை, மத்திய தொல்லியல் துறை ஏற்கனவே பதிவு செய்துள்ளது. இங்குள்ள 27 கல்வெட்டுகளை, தற்போது படியெடுத்துள்ளோம். இதில், முற்கால சோழ மன்னர்களின் மூன்றாவது மன்னரான முதலாம் பராந்தகன் காலத்தில் இருந்து, இரண்டாம் ராஜராஜன் வரையிலான அனைத்து மன்னர்களும் இக்கோவிலை பராமரிக்க, தானங்கள் அளித்தது குறித்த கல்வெட்டுகள் உள்ளன.அதாவது, முதலாம் பராந்தகனின் இருபதாம் ஆட்சியாண்டான, 927ல் பொறிக்கப்பட்ட கல்வெட்டு உள்ளது.பிற்காலத்தைச் சேர்ந்த முதலாம் ராஜேந்திரன், ராஜாதிராஜன், குலோத்துங்கன், விக்கிரமசோழன் இரண்டாம் ராஜராஜன் ஆகியோர், இந்த கோவிலை பராமரிக்க, நிலம், பொருள் தானங்களை வழங்கி உள்ளனர்.கல்வெட்டு தகவலின்படி, இந்த ஊரின் பழைய பெயர் திருநெற்குன்றம் எனவும், இது பொய்கை நாட்டு பிரிவின் கீழ், ராஜேந்திர சிம்ம வளநாடு என்ற நிர்வாக பிரிவின் கீழ் இயங்கியும் உள்ளது.இந்த கோவிலின் மூலவராக திருக்குன்றநாதரும், உடன் தானியபுரீஸ்வரி என்ற குந்தலாம்பிகையும் உள்ளனர். இதன் துணை கோவிலாக, பாதாளீஸ்வரர் சன்னிதி உள்ளது.

அணிக லன்

இந்த கோவிலில் உள்ள விக்கிரமசோழனின் 14ம் ஆட்சியாண்டான, 1132ல் வெட்டப்பட்ட கல்வெட்டில், மூலவருக்கும், அம்மனுக்கும் சாற்றப்பட்ட அணிகலன்களை பற்றிய விரிவான தகவல்கள் உள்ளன. அதில், திருச்சூட்டு திருச்சடை, திருத்தோடு, திருஆரம், திருக்கைக்கற்றை, திருகால் காரை, திருச்சிலம்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன.அதேபோல், பொன்முத்து, நீலமுத்து ஆகியவை பதித்த திருத்துடையாடையும் இருந்ததாக பட்டியலிடப்பட்டு உள்ளது.அதாவது, இந்த கோவில் சோழர்களால் தொடர்ந்து மூன்று நுாற்றாண்டுகளுக்கு மேல் நல்ல நிலையில் பராமரிக்கப்பட்டதால், தற்போதும் நல்ல நிலையில் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

seenivasan
மார் 22, 2025 10:30

பொன்முத்து, நீலமுத்து.... இதெல்லாம் இப்ப இருக்கா, இல்ல ஸ்வாஹா போட்டு ரொம்ப நாளாச்சா? உங்கள சொல்லி குத்தமில்ல, உங்க கிட்ட விட்டா நல்ல பாராமரிப்பெங்கன்னு விட்டுட்டு போனானே சோழன், அவனை சொல்லணும்.


Kasimani Baskaran
மார் 22, 2025 07:31

இந்து அறநிலையத்துறை வந்தபின்னர் நகைகளை உருக்கி இருப்பார்கள்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை