தோனியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் கமிஷனரை நியமித்தது சரியே ஐகோர்ட் அதிரடி
சென்னை:நுாறு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி தாக்கல் செய்த வழக்கில், கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய, வழக்கறிஞர் கமிஷனர் நியமிக்கப்பட்டதை எதிர்த்து, ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஐ.பி.எல்., சூதாட்ட வழக்கு தொடர்பாக, தொலைக்காட்சி விவாதத்தில், தனக்கு எதிராக அவதுாறு கருத்துக்கள் கூறியதாக, ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக, 100 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி, கிரிக்கெட் வீரர் தோனி, 2014ல், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், தோனியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய, வழக்கறிஞர் கமிஷனரை நியமித்து, கடந்த ஆகஸ்ட்டில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் சம்பத்குமார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், முகமது சபீக் அடங்கிய அமர்வு விசாரித்தது. இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது: தேசிய அளவில் மிகவும் பிரபலமானவர் தோனி. அவர் சாட்சி விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு வந்தால், நீதிமன்ற விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படும். பாதுகாப்பு ஏற்பாடுகளில் பிரச்னை ஏற்படும். எனவே, அவரது வாக்குமூலத்தை பதிவு செய்ய, நீதிமன்றம் வழக்கறிஞர் கமிஷனரை நியமித்தது. அவர் வாயிலாக வாக்குமூலத்தை பதிவு செய்யும் போது, சம்பத்குமாரோ அல்லது அவரது வழக்கறிஞரோ உடன் இருப்பர். இதனால், எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். மேலும், சம்பத்குமார் தரப்பு தோனியை குறுக்கு விசாரணை செய்ய அனைத்து வாய்ப்புகளும் தரப்படும் என தெரிவித்து, அவரது மனுவை தள்ளுபடி செய்து, விசாரணை நீதிமன்றம், வழக்கை விரைந்து முடிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.