மழைக்கால நோய் பாதிப்பு தமிழகத்தில் குறைந்து வருகிறது
சென்னை: ''தமிழகத்தில் மழைக்கால நோய் பாதிப்பு குறைந்து வருகிறது,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். வடகிழக்கு பருவமழை சுகாதார நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பங்கேற்ற பின், அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி: வடகிழக்கு பருவமழை காலத்தில், ஒவ்வொரு ஆண்டும், 86.7 செ.மீ., மழை பொழிவு இருக்கும். தமிழகத்தில் இதுவரை, 24.9 செ.மீ., அளவுக்கு மழை கிடைத்துள்ளது. பருவமழை துவங்கிய இந்த, 16 நாட்களில், தமிழகம் முழுதும் 16,248 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன் வாயிலாக, 6 லட்சத்து 78,034 பேர் பயன் அடைந்துள்ளனர். முகாம் வாயிலாக, 5,829 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு, உரிய சிகிச்சை வழங்கப்பட்டது. மேலும், 59,107 பேருக்கு இருமல், சளி பாதிப்பும், 863 பேருக்கு வயிற்றுப்போக்கு பாதிப்பு இருப்பதும் கண்டறியப்பட்டது. நோய்க்கான தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு, அனைவரும் நலமுடன் உள்ளனர். தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளாக, டெங்கு காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. இந்தாண்டு இதுவரை, 18,735 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அதில், 9 பேர் இறந்துள்ளனர். இவர்களுக்கு இணை பாதிப்பும் கண்டறியப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு இல்லாத நிலையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளை காட்டிலும், நடப்பாண்டு மழைக்கால நோய் பாதிப்பு குறைந்துள்ளது. கடந்த ஆண்டு மலேரியா பாதிப்பு 284 ஆக இருந்தது. தற்போது, 218 ஆக குறைந்துள்ளது. 550 ஆக இருந்த சிக்கன் குனியாவின் பாதிப்பு, நடப்பாண்டு, 425ஆக குறைந்துள்ளது. கடலுார் மாவட்டத்தில் பாம்புக்கடி சிகிச்சைக்காக, ஆரம்ப சுகாதார நிலையம் வந்த ஒருவர் இறந்துள்ளார். பணிக்கு வந்த டாக்டர் அருகில் உள்ள கிராமத்திற்கு மருத்துவ சேவைக்கு சென்றுள்ளார். இருப்பினும், குறிப்பிட்ட நேரத்தில் பணியில் இல்லாத காரணத்தால், டாக்டர் மீதும், பணியில் இருந்த நர்ஸ் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நட வடிக்கை மற்ற டாக்டர்களுக்கு பாடமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.