குன்றத்து மலை பிரச்னையை வைத்து வன்முறைக்கு வித்திடக்கூடாது
திருப்பரங்குன்றம்,:''திருப்பரங்குன்றம் மலை பிரச்னையை வைத்து மதத்தின் அடிப்படையில் வன்முறைக்கு வித்திடக் கூடாது,'' என, திருப்பரங்குன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.அவர் நேற்று காலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்தார். பின் பெரிய ரத வீதி பள்ளிவாசலில் திருப்பரங்குன்றம் மலை பிரச்னை குறித்து அதன் நிர்வாகிகளிடம் விசாரித்தார். தொடர்ந்து அவர் மலை மீது சிறிது துாரம் சென்று பழநி ஆண்டவர் கோயில் சன்னதி முன் நின்று விஷயங்களை கேட்டறிந்தார்.பின் அவர் கூறியதாவது: திருப்பரங்குன்றத்தில் ஹிந்துக்களும், முஸ்லிம்களும் சகோதரர்களாக நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வருகிறார்கள். இந்த மலையில் பல நுாறு ஆண்டுகளாக முஸ்லிம்களால் வழிபாடு செய்யப்பட்டு வரும் தர்கா மலை உச்சியில் இருக்கிறது. அதேபோல் ஹிந்துக்கள் வழிபாடு செய்யும் காசி விஸ்வநாதர் கோயிலும் இதே மலையின் உச்சியில் இருக்கிறது. இரு தரப்பு மக்களும் ஒரே பாதையில் சென்று நெல்லித்தோப்பு என்ற இடத்தில் பிரிந்து தனித்தனியாக தங்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்வது வாடிக்கையான ஒன்று. மலை அடிவாரத்தில் பழநி ஆண்டவர் கோயில் இருக்கிறது. திருப்பரங்குன்றத்தில் முதல் படை வீட்டு முருகன் கோயில் இருக்கிறது.சில மதவாத அமைப்புகள் இதில் தலையீடு செய்து ஹிந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே பகையை வளர்க்க முயற்சிக்கிறார்கள். அண்மைக்காலமாக இது தமிழகத்தில் பேசுபொருளாக மாறி இருக்கிறது. இங்கு வந்து மலை அடிவாரத்திலேயே இருதரப்பு பிரதிநிதிகளிடமும் விபரம் கேட்டறிந்தேன். மதவாத சக்திகள் இந்த பிரச்னையை பெரிதாக்க கூடாது. தமிழகத்தில் இதை வைத்து மதத்தின் அடிப்படையில் வன்முறைக்கு வித்திட கூடாது என்றார்.