உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இரட்டை இலை மேலே தாமரை மலர்ந்தே தீரும் *நயினார் நாகேந்திரன் புது கோஷம்

இரட்டை இலை மேலே தாமரை மலர்ந்தே தீரும் *நயினார் நாகேந்திரன் புது கோஷம்

ஓமலுார்:''இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்ந்தே தீரும். இது வெற்றி கூட்டணி,'' என,தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார்.பா.ஜ.,வின் சேலம் பெருங்கோட்டம் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், ஓமலுாரில் நேற்று நடந்தது. அதில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:'என் மண், என் மக்கள்' யாத்திரை வாயிலாக, தமிழக மக்களைத் தேடிச் சென்று சந்தித்து, எழுச்சியை ஏற்படுத்திய அண்ணாமலைக்கும் நன்றி. தமிழகத்தில் அ.தி.மு.க.,- பா.ஜ., கூட்டணிக்கு மக்கள் மத்தியில் பெரும் எழுச்சி இருக்கிறது. சமூக வலைதளங்களில், பா.ஜ.,வினோர், ஆதரவாளர்களோ அரசை விமர்சிப்பது போல கருத்துக்களை பதிவிட்டால், உடனே கைது செய்கின்றனர். அதனால், இந்த விஷயத்தில் அனைவரும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி உறுதியானது; இறுதியானது. அதனால், இது குறித்து யாரும் கருத்து பகிர வேண்டாம். வெற்றிக்காக மட்டுமே பாடுபட வேண்டும். இரட்டை இலைக்கு மேலே, தாமரை மலர்ந்தே தீரும். கூட்டணியில், யாருக்கு எத்தனை இடம், யாருக்கு சீட் என்பதெல்லாம் குறித்து, பழனிசாமியும் அமித் ஷாவும் முடிவெடுத்துக் கொள்வர். தமிழக அரசு செயல்பாட்டுக்கு, அதிக அதிகாரமும் உரிய நிதியும் வழங்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதை மத்திய அரசு உரிய முறையில் வழங்கிக் கொண்டு தான் இருக்கிறது. அதைத்தான், ராமேஸ்வரம் வந்த பிரதமர் மோடி தெள்ளத் தெளிவாக குறிப்பிட்டார். தமிழக சட்டசபையில் எதற்தெடுத்தாலும், தீர்மானம் போட்டு மத்திய அரசை வலியுறுத்துகின்றனர். யார் நினைத்தாலும் செய்ய முடியாது என்று சொல்லக் கூடிய நீட் தேர்வு நீக்கம், கச்சத்தீவு மீட்பு போன்ற பல விஷயங்களில், என்ன தீர்மானம் போட்டாலும் நடக்காது என்பது தி.மு.க.,வுக்கும் தெரியும். ஆனாலும், மக்களை ஏமாற்றவும், அவர்களுக்கான பிரச்னைகள் வெளியே தெரியாமல் மடைமாற்றம் செய்யவும் தீர்மானம் போடுகின்றனர். மத்திய அரசோடு சுமூகமான உறவு வைத்துத்தான், எதையும் மாநில அரசால் சாதிக்க முடியும். இது கூடத் தெரியாமல் தான், தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி நடத்துகிறது. மத்திய அமைச்சரவையில் காங்கிரஸோடு இணைந்து, பல ஆண்டுகள் கூட்டணி ஆட்சி நடத்திய தி.மு.க., அப்போதெல்லாம் மாநில சுயாட்சி பற்றி கவலையே படாமல், இப்போது மட்டும் சுயாட்சிக்கு பங்கம் வந்து விட்டது போல, சுயாட்சியை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் போடுகின்றனர். அவர்களுக்கே முரண்பாடாகத் தெரியவில்லையா.தமிழகத்தில் பா.ஜ., கால் ஊன்ற முடியாது என முதல்வர் சொல்கிறார். ஆனால், நான் நன்றாக கால் ஊன்றித்தான் நடந்து செல்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை