இ.பி.எஸ்., வீட்டில் புகுந்த மர்ம நபரால் பரபரப்பு
சென்னை : முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., வீட்டில் புகுந்த மர்ம நபரை பிடித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.சென்னை அபிராமபுரம் பசுமை வழிச்சாலையில், முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., அமைச்சர்கள் மற்றும் நீதிபதிகள் வீடுகள் உள்ளன. அந்த பகுதியில், 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பர்.சட்டசபைக்கு சென்றிருந்த பழனிசாமி நேற்று மதியம், 1:00 மணியளவில் வீட்டிற்கு திரும்பினார். அப்போது, மர்ம நபர் ஒருவர், போலீசார் தடுத்து நிறுத்தியும் கேட்காமல், பழனிசாமியின் வீட்டிற்குள் புகுந்தார். பாதுகாப்பு போலீசார், கார் நிறுத்தும் பகுதிக்குள் அந்த நபரை மடக்கிப் பிடித்து, அபிராமபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.விசாரணையில், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேசன், 28. என்பது தெரியவந்தது. சொந்த ஊரில் கோவில் கட்டி வருவதாகவும், அதற்கு நிதியுதவி கேட்கவே, பழனிசாமி வீட்டிற்கு வந்ததாகவும், போலீசாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, வெங்கடேசனை எச்சரித்து அனுப்பினர்.