உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காட் ஆப் ஹேர் கட்டிங் ஆன முடி சூடும் பெருமாள் பெயர்

காட் ஆப் ஹேர் கட்டிங் ஆன முடி சூடும் பெருமாள் பெயர்

சென்னை: அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., நடத்திய ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு வினாத்தாளில், ஆங்கில மொழிபெயர்ப்பில் குளறு படிகள் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு கனிமவள நிறுவனத்தில், சுரங்க அளவர், தொல்லியல் துறை இளநிலை பொறியாளர், இளநிலை வரைதொழில் அலுவலர் உட்பட, 58 தொழில்நுட்ப பணிகளில் மொத்தம், 1,910 காலி பணியிடங்கள் உள்ளன.

சர்ச்சை

இதற்கான போட்டித்தேர்வு நேற்று முன்தினம் துவங்கியது. முதல் கட்டமாக, தமிழ் மொழி தகுதித்தேர்வு, பொது அறிவு, திறன் தேர்வுகள் நடந்தன. இந்த தேர்வில் ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்விகள், சர்ச்சைக்குரிய வகையில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன; இது, தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேர்வில், 'வைகுண்ட சுவாமிகள் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க' என்ற 132வது கேள்வியின் முதல் கூற்றில், 'முடி சூடும் பெருமாள் என்றும், முத்துக்குட்டி என்றும் அழைக்கப்பட்டார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் ஆங்கில மொழிபெயர்ப்பில், 'He is known as the god of hair cutting and also as muthukutti' என, இடம் பெற்றுள்ளது. 'முடிசூடும்' என்ற தமிழ்ச்சொல், ஆங்கிலத்தில் முடி வெட்டும் கடவுள் என, சர்ச்சைக்குரிய வகையில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. அதேபோல, கேள்வி எண் 172ல், 'மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் சரியான கூற்றுகளை கண்டறியவும்' என கேட்கப்பட்டு, அதற்கு மூன்று கூற்றுகள் வழங்கப்பட்டன.

போட்டி தேர்வு

மூன்றாவது கூற்றானது, 'இந்த திட்டத்திற்காக ஐக்கிய நாடுகள் சபையின் சக அமைப்பு திட்டக்குழு விருதுகளை, 2024ம் ஆண்டு பெற்றுள்ளது' என, கொடுக்கப்பட்டு உள்ளது. இதை ஆங்கிலத்தில், 'It begged the united nation interagency task force awards in the year of 2024' என மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அதாவது, விருது பெற்றுள்ளது என்பதற்கு பதிலாக, விருதை கெஞ்சி பெற்றனர் என ஆங்கிலத்தில் தவறாக மொழி பெயர்த்துள்ளனர். இப்படி ஒவ்வொரு போட்டித் தேர்விலும் நடக்கும் தவறான மொழிபெயர்ப்புகள், தேர்வர்களை திணறடித்துக் கொண்டிருக்கின்றன. இதுகுறித்து, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்து, அரசு பணிக்கான தேர்வுகளை குறித்த நேரத்தில் நடத்தாமலும், பல முறைகேடுகளாலும், குளறுபடிகளாலும், தமிழக இளைஞர் களின் அரசு பணி கனவு சிதைந்து கொண்டிருக்கிறது' என்று கூறப்பட்டு உள்ளது. மேலும், பா.ம.க., தலைவர் அன்புமணி, தமிழக நாடார் சங்க தலைவர் முத்துரமேஷ் ஆகியோரும், இந்த குளறுபடிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

விசாரணை@

@ குளறுபடி குறித்து, டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள் கூறுகையில், 'ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு வினாத்தாளில், தவறான ஆங்கில மொழிபெயர்ப்பு குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். தவறு எங்கு நடந்தது என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். இனி வரும் தேர்வுகளில், இது போன்ற தவறுகள் இல்லாமல் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை