ஓசூர் : ஓசூர், செக் - போஸ்ட் வழியாக, தமிழகத்துக்கு கடத்த முயன்ற, 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், இருவரை கைது செய்தனர். மும்பை வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து, ஓசூர் அடுத்த, ஜுஜுவாடி, கக்கனூர், அந்திவாடி, சம்பங்கிரி, நல்லூர் உள்ளிட்ட எல்லையோர செக் - போஸ்ட்களில், சிறப்பு அதிரடிப்படை போலீசார், உள்ளூர் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு, ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து, கர்நாடகா வழியாக தமிழகத்துக்கு வந்த, டாடா சுமோ வாகனத்தை, ஜுஜுவாடி செக் - போஸ்ட்டில் நிறுத்தி, போலீசார் சோதனை செய்ய முயன்றனர். சுமோ டிரைவர் மற்றும் இருவர், போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர். இருவரை மடக்கி பிடித்த போலீசார், வாகனத்தை சோதனையிட்டதில், ஐந்து மூட்டைகளில், 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள, 200 கிலோ கஞ்சாவை கடத்த முயன்றது தெரிந்தது. சுமோவுடன் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், பிடிப்பட்ட இருவரும், ஆந்திரா மாநிலம், கரீம்நகர் மாவட்டம், கொத்தகொண்டப்பள்ளியை சேர்ந்த கனகையா, 45, பீமதேவப்பள்ளியை சேர்ந்த டிரைவர் பிரசாத், 20, என்பது தெரிந்தது. இவர்கள், இதேபோல் பலமுறை ஆந்திராவில் இருந்து கர்நாடகா மற்றும் தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களுக்கு, கஞ்சா கடத்தி வந்து சப்ளை செய்துள்ளனர். போதை பொருட்களை ஆந்திராவில் இருந்து கர்நாடகாவுக்கு ஒரு கும்பலும், அதன் பின், மற்றொரு கும்பல், கர்நாடகாவிலிருந்து ஓசூர் வழியாக, தமிழகத்துக்கும் கடத்தி வருகின்றனர்.
இக்கடத்தல் கும்பலில், கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தை சேர்ந்த மிகப்பெரிய கும்பல், 'நெட்வொர்க்' அமைத்து செயல்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்து, தொடர்ந்து விசாரிக்கின்றனர்.