உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சீன பூண்டு விலையும் 200 ரூபாயாக அதிகரிப்பு

சீன பூண்டு விலையும் 200 ரூபாயாக அதிகரிப்பு

சென்னை:மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், ஒடிசா, உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் பூண்டு அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் மலைப் பூண்டு சாகுபடி நடக்கிறது. தற்போது, நாடு முழுதும் பூண்டு விளைச்சல் குறைந்துள்ளது. மொத்த வியாபாரிகள், கிடங்குகளில் பூண்டுகளை அதிகளவில் பதுக்கியுள்ளனர். இதனால், ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக, பூண்டின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. சென்னை கோயம்பேடு சந்தையில், கிலோ பூண்டு, 400 முதல் 450 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இரண்டாம் தர பூண்டு, 300 ரூபாய் வரை விற்பனையாகிறது. பூண்டு விலை உயர்ந்த நிலையில், சீனாவில் ஷன்டாங், பீஜிங் உள்ளிட்ட நகரங்களில் இருந்து பூண்டு அதிகம் இறக்குமதி செய்யப்படுகிறது. சீன பூண்டு முன்னர் கிலோ, 60 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது கிலோ, 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது.இதுகுறித்து, கோயம்பேடு சந்தை பூண்டு மொத்த வியாபாரி ஒருவர் கூறியதாவது:மலைப்பூண்டு போல, தோற்றத்தில் பெரிதாக சீனா பூண்டு இருக்கும். காரத்தன்மையும் ஓரளவிற்கு இருக்கிறது. ஆனால், நாட்டு பூண்டை போல, பல நாட்கள் பதப்படுத்தி வைத்து, பயன்படுத்த முடியாது. சீன பூண்டின் ஆயுள் காலம் ஒரு வாரம்தான். அதன்பின், தோல் கருப்பாகி விடும்; காரத்தன்மையும் குறைந்து விடும்.சீன பூண்டை வாங்கி உடனே பயன்படுத்த வேண்டும். தற்போது, நாட்டு பூண்டு விலை அதிகரித்துள்ள நிலையில், சீனா பூண்டு விலையும் மெல்ல உயர்ந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !